Tamilnadu

“அஞ்சல்துறை தேர்வுகளில் அநீதி” : திருமாவளவன் கண்டனம்!

புதிய கல்விக் கொள்கை என்ற பெயரில் இந்தித் திணிப்பு நடவடிக்கைகளை மோடி அரசு தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. இதற்கு எதிர்ப்பு எழும்போது சற்று பின் வாங்கினாலும் நிலையை மாற்றிக் கொள்வதில்லை. அந்த வகையிலேயே இந்திய அஞ்சல்துறைககான தேர்வுகள் இனி இந்தி மற்றும் ஆங்கிலம் ஆகிய மொழிகளில் மட்டுமே நடத்தப்படும் என்று மோடி அரசு அறிவித்துள்ளது.

இதற்கு கண்டனம் தெரிவித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் அவர் தெரிவித்திருப்பதாவது, "அஞ்சல் துறையில் போஸ்ட்மேன் உள்ளிட்ட பதவிகளுக்கு 1000 பணியிடங்களுக்கான தேர்வு நாளை நடைபெறவுள்ளது. இந்தி மற்றும் ஆங்கிலத்தில்தான் அந்தத் தேர்வுகளை எழுதவேண்டும் என்ற அறிவிப்பை மாற்றி வழக்கம்போலத் தமிழில் எழுத உத்தரவிடவேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் மத்திய அரசை வலியுறுத்துகிறோம்.

அஞ்சல்துறைப் பணியிடங்களுக்கான தேர்வுகளைத் தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளில் எழுதும் வசதி இதுவரை இருந்துவந்தது. கடந்த 2019 மே 16 ஆம் தேதி வெளியிடப்பட்ட அறிவிப்பிலும் பிராந்திய மொழிகளில் தேர்வு எழுதலாம் என்றுதான் கூறப்பட்டிருந்தது. திடீரென்று இப்போது இந்தி மற்றும் ஆங்கிலத்தில் மட்டுமே எழுதலாம் என மாற்றியுள்ளனர். 2019 ஜூலை மாதம் 11 ஆம் தேதிதான் இந்தப் புதிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இது மாபெரும் அநீதி மட்டுமல்ல மோசடியுமாகும்.

2016-17 ஆம் ஆண்டு தேர்வு நடைபெற்றபோது பிற மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களைவிட தமிழில் கூடுதலாக மதிப்பெண் பெற்றதாக அறிவிக்கப்பட்டு பணி வழங்கப்பட்டது. அதில் மிகப்பெரிய மோசடி நடந்திருப்பது பின்னர் தெரியவந்தது. தற்போது அந்த மோசடி குறித்து சிபிஐ விசாரித்து வருகிறது. இப்போதும் தமிழ்நாட்டைச் சேராதவர்களை இங்கே பணி அமர்த்துவதற்கான சதித்திட்டம் தீட்டப்பட்டிருப்பது தெரிகிறது.

இரண்டு நாட்களுக்கு முன்னர்தான் நாடாளுமன்றத்தில் ரயில்வே துறை மானியக் கோரிக்கைமீது பேசும்போது ரயில்வே துறை வேலைகளில் வெளிமாநிலத்தவர் தமிழ்நாட்டில் திணிக்கப்படுவதைத் தடுக்கவேண்டும் என விசிக சார்பில் வலியுறுத்தினோம். இப்போது அஞ்சல்துறையில் இந்த அநீதி இழைக்கப்படுகிறது.

மத்திய அரசு இந்த அறிவிப்பை உடனடியாகத் திரும்பப் பெறவேண்டும். தமிழிலும் எழுத அனுமதிக்கவேண்டும். இல்லாவிடில் தமிழகம் மிகப்பெரிய போராட்டக்களமாக மாறும் என எச்சரிக்கிறோம்.” என அவர் தெரிவித்துள்ளார்.