Tamilnadu
தே.மு.தி.க தோல்விக்கு இவர்கள் தான் காரணம் : தொண்டர்கள் சொல்லும் பகீர் ரிப்போர்ட்!
எதிர்க்கட்சியாக இருந்த தே.மு.தி.க இன்று தடமே இல்லாமல் போனதற்கு தே.மு.தி.க நிர்வாகிகள், தொண்டர்கள் தங்கள் வருத்தங்களை தெரிவித்து வருகின்றனர். கட்சி இன்று இந்த நிலைமைக்குச் சென்றதற்கு காரணம் அவர்கள் இரண்டு பேரும் தான் என்று கட்சி அலுவலகத்திலேயே நிர்வாகிகள் பேசத் தொடங்கியுள்ளனர். யார் அந்த இரண்டு பேர்? வேறு யார் சுதீஷ் மற்றும் பிரேமலதா தான் என்பதுதான் தே.மு.தி.க-வின் கடைக்கோடித் தொண்டர்களும் சொல்லும் காரணம்.
கட்சி தொடங்குவதற்கு முன்பு இருந்த லட்சக்கணக்கான ரசிகர்களை தொண்டர்களாக உருவாக்க அரும்பாடுபட்டவர் தே.மு.தி.க தலைவர் விஜயாகாந்த். கடுமையான உழைப்பின் மூலம் மாவட்டம் தோறும் கட்சியை வளர்க்கப் பாடுபட்ட அவருக்கு சுதீஷ் மற்றும் பிரேமலதாவை சமாளிக்க முடியாமல் போனது வருந்தத்தக்கது. கட்சி செயல்பாடுகளில் தலையிட ஆரம்பித்தவர்கள் மெல்ல மெல்ல நிர்வகிக்கும் இடத்திற்கு வந்தது பெரும் அதிர்ச்சியை நிர்வாகிகள் மத்தியில் உண்டாக்கியது.
முன்னதாக நடந்து முடிந்த தேர்தலில், போட்டியிட்ட இடங்களில் டெபாசிட் கூட பெறமுடியாத இடத்திற்கு தே.மு.தி.க தள்ளப்பட்டது. தேர்தலின் போது மாவட்ட நிர்வாகிகள் "தேர்தல் நடத்துவதற்கு எங்களிடம் பணம் இல்லை, எப்படி தேர்தலை சந்திப்பது" என கட்சி தலைமையில் உள்ள இரண்டு பேரிடம் கூறியுள்ளனர். ஆனால் அதை அவர்கள் சற்றும் காதில் வாங்கிக் கொள்ளவில்லை என்று சில மாவட்ட நிர்வாகிகள் வேதனையுடன் தெரிவித்துள்ளனர்.
சமீபத்தில், விஜயகாந்த் கல்லூரி, வீடு ஏலத்திற்கு வருகிறது என்று செய்திகள் வெளிவந்தன. இந்தச் செய்தி நிர்வாகிகளுக்கு இடியாய் அமைந்தது. இந்த செய்தி அதிக அளவு அனுதாபத்தைத் பெறும் எனத் தெரிந்தே கட்சித் தலைமை எந்த முயற்சியும் எடுக்கவில்லை.
பிரேமலதா இந்தக் கடன் கட்சிக்காக வாங்கியது என்கிறார், ஆனால், 5 கோடி கடனைக் கட்டமுடியாமல் போனதற்கு எப்படி 100 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்கள் ஏலத்திற்கு வரும் என குழம்பிப் போய் கேள்வி கேட்கிறார்கள். அதற்கும் பதிலே இல்லை.
ஏற்கனவே பணம் இல்லாததால் தான் கட்சி செயல்படாமல் பல மாவட்டங்களில் முடங்கிப்போயுள்ளது. இந்நிலையில், நிர்வாகிகளுக்கு பிரேமலதா அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். அதில் அவசரக் கூட்டம் என்றதும் நிர்வாகிகள்,முடங்கிய கட்சியை பலப்படுத்தவும், நிர்வாகிகளை கூடுதலாக இணைப்பதற்கும் தான் இந்த ஆலோசனைக் கூட்டம் நினைத்து சென்றுள்ளனர். ஆனால் அங்கு சென்றதுமே அவர்களை சங்கடப்படுத்தும் விதமாக ஏலத்திற்கு வரும் நமது சொத்துக்களை மீட்கவே வர சொல்லியிருக்கிறார். இதனால் நிர்வாகிகள் அதிருப்தி அடைந்துள்ளதாக தகவல் வெளிவந்தது.
இதனிடையே, நிர்வாகி ஒருவர் கூறியதாவது, "கூட்டணி தேர்வு செய்யும் விதத்திலிருந்து, எல்லா முடிவுகளையும் சரியாக எடுக்கமுடியாமல் சொதப்பலில் முடிந்தது. அந்த சொதப்பலின் விளைவே தோல்வி. இந்த தோல்வியை ஏற்றுக்கொள்ளும் பக்குவம் பலரிடம் இன்று இல்லாமல் போனது. எங்கள் தலைவர் கேப்டன் விஜயகாந்த்தை நம்பித்தான் உள்ளே வந்தோம்.
தற்போது அவருக்கே உடல்நிலை சரியில்லை. இனியும் எங்களால் எந்த அளவு இந்த கட்சியில் பயணிக்க முடியும் என்று தெரியவில்லை” என்று வேதனையுடன் கட்சி அலுவலகத்தில் இருந்து புலம்பிக்கொண்டே செல்கின்றனர்.
இன்றும் விஜயகாந்த் மீது பற்றுள்ளவர்கள், பாசம் வைத்தவர்கள் மற்றும் சில மாவட்ட நிர்வாகிகள் மட்டுமே கட்சியில் உள்ளனர். பலர் கட்சி செயல்பாடுகளில் இருந்து ஒதுங்கிவிட்டனர். மேலும் பலர் வேறு கட்சியில் இணைய உள்ளனர் என்று தகவல் வெளிவந்துள்ளது. கூட்டணியில் இருக்கும்போதே சில மாவட்டங்களில் அ.தி.மு.க-வினர் தே.மு.தி.க நிர்வாகிகளை தங்கள் பக்கம் இழுக்க முயற்சி செய்துள்ளனர்.
தேர்தலுக்கு முன்பு, பா.ஜ.க - அ.தி.மு.க தமிழக நலன்களுக்கு எதிராக செயல்படுகிறது . அவர்களுடன் கூட்டணி போனால் நிச்சயம் படுதோல்வி தான், தனியாக கூடப் போட்டியிடலாம் என்று பல நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். ஆனால் அதை ஒரு கருத்தாக கூட ஏற்றுக்கொள்ளத் தயாராக இல்லை” என்று பல நிர்வாகிகள் இப்போது நேரடியாகவே குற்றம் சாட்டியுள்ளனர்.
அதிருப்தி அடைந்த நிர்வாகிகள் பலர் தி.மு.கவில் தங்களை இணைத்துக்கொள்ளுங்கள் என்று தி.மு.க நிர்வாகிகளிடம் பேசிவருவதாகவும் தகவல் வந்துள்ளது. தே.மு.தி.க இனி மீண்டு வரவேண்டும் என்றால் அவர்கள் இரண்டு பேரை ஓரங்கட்டவேண்டும் என தே.மு.தி.க ஆதரவாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!