Tamilnadu

தமிழக அரசின் நிலம் கையகப்படுத்தும் சட்டத்தை ரத்துசெய்தது சென்னை உயர்நீதிமன்றம்!

அரசு திட்டங்களுக்காக தனியார் நிலங்களை கையகப்படுத்த, நியாயமான இழப்பீடு, வெளிப்படைத்தன்மை, மறுவாழ்வு மற்றும் மறு குடியமர்வு என்ற சட்டத்தை மத்திய அரசு கடந்த 2013-ம் ஆண்டு கொண்டு வந்தது.

மத்திய அரசின் இந்த புதிய சட்டத்தில் இருந்து மாநில அரசின் நில கையகப்படுத்தும் சட்டங்களான மாநில நெடுஞ்சாலைகள் சட்டம், தொழில் பயன்பாட்டிற்கான நிலம் கையகப்படுத்தும் சட்டம் மற்றும் ஹரிஜன் நல சட்டம் ஆகிய சட்டங்களை பாதுகாக்கும் வகையில் கடந்த 2015 ஆம் ஆண்டு தமிழக அரசு 105 (a) என்ற சட்ட பிரிவை சேர்த்து நியாயமான இழப்பீடு, வெளிப்படைத்தன்மை, மறுவாழ்வு மற்றும் மறு குடியமர்வு என்ற சட்டத்தை கொண்டு வந்தது.

மத்திய அரசு சட்டம் கொண்டு வந்து ஒன்றரை ஆண்டுகளுக்கு பிறகு தமிழக அரசு கொண்டு வந்த இந்த புதிய சட்டம் செல்லாது என அறிவிக்கக் கோரி ராமநாதபுரத்தை சேர்ந்த கருணாநிதி உட்பட 100-க்கும் மேற்பட்ட விவசாயிகள் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்குகள் நீதிபதிகள் மணிக்குமார் மற்றும் சுப்ரமணியம் பிரசாத் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தபோது, மத்திய அரசு கொண்டு வந்த சட்டத்தில் இருந்தது போல, தமிழக அரசின் இந்தப் புதிய சட்டத்தில் பொதுமக்கள் மற்றும் விவசாயிகளிடம் கருத்துக்கேட்பு கூட்டம் நடத்தாமல் நிலங்களை கையகப்படுத்தக்கூடாது என்ற விதி இல்லை எனவும், நிலம் கையகப்படுத்தும் 6 மாதத்தில் உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்ற விதிகள் இல்லாததும் நில உரிமையாளர்களுக்கு மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தி உள்ளதாக மனுதாரர் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் வில்சன் வாதிட்டார்.

கையகப்படுத்தும் நிலத்தின் மதிப்பில் 2 மடங்கு வரை இழப்பீடு வழங்கவேண்டும் என்றும் விவசாய நிலத்தை கையகப்படுத்தக் கூடாது என்றும் மத்திய அரசின் சட்டத்தில் கூறப்படுள்ள நிலையில் தமிழக அரசின் இந்தச் சட்டத்தில் இது போன்ற வழி வகைகள் எதுவும் இல்லை எனவும் குற்றஞ்சாட்டப்பட்டது.

சட்டப்பேரவையில் அறிவிக்கை தாக்கல் செய்யாமல் தமிழக அரசு கொண்டு வந்த இந்தப் புதிய சட்டம் அரசியல் சாசனத்திற்கு எதிரானது எனவும், இந்த நிலம் கையகப்படுத்தும் சட்டங்களை பாதுகாக்க தனி சட்டத்தைத்தான் இயற்றவேண்டும் எனவும் அவர் வாதிட்டார்.

தமிழக அரசின் இந்த சட்டத்தை ரத்து செய்தால் சுமார் 80 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான உட்கட்டமைப்பு திட்டங்கள் பாதிக்கப்படும் என தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இரு தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதிகள், நிலம் கையகப்படுத்துவது தொடர்பாக தமிழக அரசு கொண்டு வந்த புதிய சட்டத்தை செல்லாது என அறிவித்து தீர்ப்பளித்தனர்.

மேலும், இந்த 3 நில கையகப்படுத்தல் சட்டங்களின் கீழ் தமிழக அரசால் நிலம் கையகப்படுத்தும் பணிகள் முடிவடைந்திருந்தால் இந்த தீர்ப்பு பொருந்தாது எனவும், செயல்பாட்டில் உள்ள திட்டங்களுக்கு மட்டுமே இந்த தீர்ப்பு பொருந்தும் எனவும் நீதிபதிகள் தெளிவுபடுத்தினர்.

இந்த தீர்ப்பின் காரணமாக ராமநாதபுரம் உப்பூரில் சுமார் 5,000 ஏக்கர் நிலம் கையகப்படுத்தும் பணிகள் நிறுத்தப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது. உயர்நீதிமன்றத்தின் இந்த உத்தரவின் மூலம் மெட்ரோ ரயில் இரண்டாம் கட்ட பணிகள் மேற்கொள்ள முடியாத சூழ்நிலையும் ஏற்பட்டுள்ளது.

இதன் மூலம், சேலம் எட்டுவழிச்சாலை திட்டத்துக்காக விவசாயிகளிடம் இருந்து அபகரிக்கப்பட்ட நிலங்கள் மீண்டும் விவசாயிகளிடமே ஒப்படைக்கப்படுமா என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.