Tamilnadu

மதுரை : காவல்துறை பெண் இன்ஸ்பெக்டர் வீட்டில் கொத்தடிமையாக இருந்த சிறுமி மீட்பு !

தேனி அல்லிநகரம் காவல் ஆய்வாளராக பணியாற்றி வருபவர் சண்முகலட்சுமி. இவரது சொந்த ஊர் மதுரை அருகில் உள்ள காடுபட்டி. சண்முகலட்சுமியின் மகள் மற்றும் அவரது தாயார் காடுபட்டியில் உள்ள வீட்டில் வசித்து வந்தனர். தனது தாய் மற்றும் குழந்தைக்கு உதவுவதற்காக தேனி மாவட்டம் தேவாரத்தைச் சேர்ந்த 11 வயது சிறுமியை சட்டவிரோதமாக தத்ததெடுத்து அனுப்பி வைத்துள்ளார் சண்முகலட்சுமி.

தத்தெடுக்கப்பட்ட குழந்தையை பள்ளிக்கு அனுப்பாமல் வீட்டு வேலை செய்ய வைத்து கொடுமைபடுத்தி வந்துள்ளார். இதனை அறிந்த பக்கத்து வீட்டுக்காரர்கள் குழந்தையை மீட்பதற்காக சைல்டு ஹெல்ப் லைன் எண் மூலம் புகார் அளித்தனர். இதனையடுத்து விசாரணைக்குச் சென்ற சைல்டு லைன் அதிகாரிகளை சண்முகலட்சுமி மிரட்டி அனுப்பியுள்ளார்.

இதனால், அந்த அதிகாரிகள் இவ்விவகாரத்தை குழந்தைகள் நல கமிட்டிக்கு கொண்டு சென்றனர். பின்னர் போலீசார் உதவியுடன் காடுபட்டிக்குச் சென்ற குழந்தைகள் நல கமிட்டியினர் சம்மந்தப்பட்ட சிறுமியை மீட்டனர்.

இதுகுறித்து பேசிய சண்முகலட்சுமி, குழந்தையை தத்தெடுத்ததில் தனக்கு எந்த சம்மந்தமும் இல்லை, ஏழ்மையில் இருந்த குழந்தையை தமது தாய் எடுத்து வளர்த்ததாக விளக்கமளித்துள்ளார்.

மீட்கப்பட்ட சிறுமி மதுரை முத்துப்பட்டியில் உள்ள தனியார் காப்பகத்தில் தற்காலிகமாக வைக்கப்பட்டு, சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. காவல் ஆய்வாளர் சண்முகலட்சுமியின் தாயார் தெய்வராணி மீது, குழந்தையைக் கொடுமைப்படுத்தியது, காயம் ஏற்படும் வகையில் தாக்கியது, உள்ளிட்ட மூன்று பிரிவுகளின் கீழ் காடுபட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.