Tamilnadu

”புலி பதுங்குவதே பாய்வதற்குத்தான்” சரியான நேரத்தில் பாய்வோம்:மு.க.ஸ்டாலின் அதிரடி பேச்சு!

சபாநாயகருக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானம் கொடுத்த பிறகு தி.மு.க பதுங்கிவிட்டதாகக் கூறுகிறார்கள். ”புலி பதுங்குவதே பாய்வதற்குத்தான்” சரியான நேரத்தில் பாய்வோம் என தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

விக்கிரவண்டித் தொகுதி எம்.எல்.ஏவாக இருந்த ராதாமணியின் நினைவேந்தல் மற்றும் படத்திறப்பு விழா கலிஞ்சிக்குப்பத்தில் நடைபெற்றது. இந்த விழாவிற்கு தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் கலந்துக் கொண்டு ராதாமணியின் திரு உருவப் பாடத்தைத் திறந்து வைத்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

பின்னர் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், ”தி.மு.க கழகத்தின் பொறுப்புமிக்கத் தொண்டராகச் சிறப்பாகச் செயலாற்றியவர். அவர் மருத்துவமனையில் சிகிச்சையில் இருக்கும்போது, நேரடியாக நானும் முன்னாள் அமைச்சர் பொன்முடி அவர்களும் நேரில் சந்தித்தோம், அப்போது ராதாமணி அந்த நேரத்திலும் எங்களை வரவேற்று அவர் காட்டிய மரியாதை எனது மனதில் இன்னும் பதிந்துள்ளது.

அதுமட்டுமின்றி 33 ஆண்டுகள் தொடர்ந்து ஒன்றிய கழகத்தின் செயலாளராக இருந்துள்ளார். இது சாதரான விசயமல்ல, பெரும் சாதனை, இதை நாம் பாராட்டியே ஆகவேண்டும். அவர் நம்முன்னே படமாக மட்டுமல்ல, சிறந்த பாடமாக விளங்கிக்கொண்டிருக்கிறார். என்று அவரை புகழாரம் சூட்டினார்.

அதைத் தொடர்ந்து பேசிய மு.க ஸ்டாலின், தமிழ்நாட்டில் இன்னும் இந்த ஆட்சி நீடிக்கிறது. இதனை மக்கள் குறையாகப் பார்க்கிறார்கள், மக்களின் இந்த குறையை நிச்சயம் போக்க ராதாமணி படத்திறப்பு விழாவில் உறுதியோடு சொல்கிறேன், இந்த ஆட்சி மாறும், ஆட்சி மாற்றம் வரும் என அவர் தெரிவித்தார்.

சட்டமன்ற சபாநாயகர் மீது கொடுத்த நம்பிக்கை இல்லா தீர்மானத்தை வலியுறுத்த மாட்டோம் என்று சட்டசபை கூடிய தினத்தன்று அறிவித்தோம். சபாநாயகர் மீது நாம் எதற்காக நம்பிக்கை இல்லாத தீர்மானம் கொடுத்தோம் என்றால் அப்போதே நான் தெளிவாக சொன்னேன்.

அ.தி.மு.க எம்.எல்.ஏக்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கூடாது என்பதற்காக தி.மு.க சார்பில் சபாநாயகர் மீது நம்பிக்கையில்ல தீர்மானம் கொண்டுவந்தோம். அதன் பிறகு நீதிமன்றம் சபாநாயகர் உத்தரவிற்குத் தடை வித்தது. இது ஜனநாயக முறையோடு, தலைவர் கலைஞர் கற்றுக்கொடுத்த ராஜதந்திரத்தோடு அதனைக் கையாண்டோம். ஆனால் இதைச் சரியாக புரிந்துகொள்ளாமல் தி.மு.க பதுங்கிவிட்டதாகக் கூறுகிறார்கள்.

புலி பதுங்கும், பதுங்குவதே பாய்வதற்குத்தான், ஓடி ஒழியப் பதுங்காது, பாயவேண்டிய நேரத்தில் பாயுவோம், முடிவு எடுக்கவேண்டிய நேரத்தில் முடிவு எடுப்போம் என்ற உறுதியை ராதாமணி படதிறப்பு விழாவில் உறுதியோடு தெரிவித்துக் கொள்கிறேன்”.என அவர் தெரிவித்தார்.