Tamilnadu

தண்ணீர் தட்டுப்பாடு குறித்த கூட்டத்தில் அமைச்சரின் முன்னிலையிலேயே தூங்கிவழிந்த அதிகாரிகள்!

தமிழகம் முழுவதும் கடுமையான வறட்சியும், தண்ணீர் பற்றாக்குறையும் நிலவி வருவது நாம் அனைவரும் அறிந்ததே. அதைத் தீர்க்கத் தேவையான நடவடிக்கைகள் எடுக்காமல் மெத்தனமாகச் செயல்பட்டு வருகிறது எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க அரசு.

திண்டுக்கல் மாவட்டத்தில் கடந்த 6 ஆண்டுகளாகவே வறட்சி நிலவி வருகிறது. அம்மாவட்டத்தின் ஆறுகள், குளங்கள், கண்மாய்கள் என அனைத்து நீர்நிலைகளும் வறண்டுவிட்டன. நிலத்தடி நீர்மட்டம் அதளபாதாளத்திற்குச் சென்றுவிட்டதால் விவசாயிகளும் தவித்து வருகின்றனர்.

இந்நிலையில், நேற்று அ.தி.மு.க அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தலைமையில் தண்ணீர் தட்டுப்பாட்டைச் சமாளிப்பது குறித்த ஆலோசனைக் கூட்டம் திண்டுக்கல்லில் நடைபெற்றது.

அந்தக் கூட்டத்தில் கலந்துகொண்ட அதிகாரிகள் சிலர் அமைச்சர் முன்னிலையிலேயே தூங்கி வழிந்தனர். இதுகுறித்து ஆட்சியரோ, உயரதிகாரிகளோ வாய் திறக்கவைல்லை என்றும் பல அதிகாரிகள் குற்றம்சாட்டியுள்ளனர்.

தற்போது நிலவி வரும் முக்கியப் பிரச்னையான தண்ணீர் தட்டுப்பாட்டைப் பற்றிய ஆலோசனைக் கூட்டத்திலேயே எதிலும் கவனம் கொள்ளாமல் தூங்கி வழியும் இந்த அதிகாரிகளால் மக்களுக்கு எப்படி நன்மை விளையும் என பொதுமக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.