Tamilnadu

'கேளு சென்னை கேளு' தண்ணீர் பிரச்னைக்கு தீர்வு கேட்கும் போராட்டத்திற்கு நீதிமன்றம் அனுமதி!

''கேளு சென்னை கேளு'' என்ற அறப்போர் இயக்கத்தின் உண்ணாவிரத போராட்டத்திற்கு அனுமதி வழங்குமாறு காவல்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நீர்நிலைகளை ஆழப்படுத்தி வேண்டும், பாதுகாக்க வேண்டும் போன்ற கோரிக்கைகளை நிறைவேற்ற தமிழக அரசை வலியுறுத்தும் வகையில் அறப்போர் இயக்கம் உண்ணாவிரத போராட்டம் நடத்த திட்டமிட்டது. ''கேளு சென்னை கேளு'' என்ற கோசத்தை முன் வைக்கும் இந்த போராட்டத்தை ஜூன் 30 ஞாயிற்றுகிழமை நடத்த அனுமதி கோரி சென்னை மாநகர காவல் ஆணையரிடம் அறப்போர் இயக்கம் சார்பாக விண்ணப்பம் அளிக்கப்பட்டது.

ஆனால், அந்த விண்ணப்பத்தை காவல்துறை நிராகரித்தது. அதே தேதியில் வேறு அமைப்பு அனுமதி கோரிய விண்ணப்பம் பரிசீலனையில் இருப்பதாகவும், ஒரே நாளில் இரண்டு பேருக்கு அனுமதி வழங்குவது சாத்தியமில்லை எனவும் காவல் துறை தரப்பில் கூறப்பட்டது. இதுதவிர பொது அமைதி, சட்டம் ஒழுங்கு ஆகியவற்றை நிலைநாட்ட வேண்டிய காரணத்தாலும் நிராகரிக்கப்படுவதாக ஆணையரகம் குறிப்பிட்டுள்ளது.

இந்த உத்தரவை ரத்து செய்து, உண்ணாவிரத போராட்டத்திற்கு அனுமதி வழங்க கோரி அறப்போர் இயக்கத்தின் சார்பில் அதன் ஒருங்கிணைப்பாளர் ஜெயராம் வெங்கடேசன், சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது.

வழக்கை விசாரித்த நீதிபதி வரும் ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை சென்னை வள்ளுவர் கோட்டத்தில் போராட்டம் நடத்திக் கொள்ள அனுமதிக்குமாறு காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளார்.