Tamilnadu

‘பஸ் டே’ விபத்து விவகாரம் : பேருந்தை இயக்கிய ஓட்டுநர், நடத்துனர் மீது நடவடிக்கை!

சென்னையில் கல்லூரி மாணவர்களால் வருடாவருடம் ‘பஸ் டே’ எனப்படும் பேருந்து தினம் அனுசரிக்கப்பட்டு வருகிறது. ‘பஸ் டே’ கொண்டாடுவதற்கு தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில் கடந்த ஜூன் 18-ம் தேதி ‘பஸ் டே’ கொண்டாடுவதாகக் கூறி ஆவடியில் இருந்து அண்ணா சதுக்கம் செல்லும் அரசு பேருந்தில் (40A) மேற்கூரையில் அமர்ந்து பச்சையப்பா கல்லூரி மாணவர்கள் சிலர் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது பேருந்துக்கு முன்னே பைக்கில் சென்ற மாணவர்கள் திடீரென பிரேக் போட்டதால் பேருந்து ஓட்டுனரும் உடனே பிரேக் போட்டார். இதை எதிர்பாராத பேருந்தின் மேற்கூரையில் அமர்ந்திருந்த சுமார் 20-க்கும் மேற்பட்ட மாணவர்கள் மளமளவென சரிந்து கீழே விழுந்தனர்.

இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக அனைத்து மாணவர்களும் சிறு காயங்களோடு தப்பினர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலானது. இந்தச் சம்பவம் பொது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. ‘பஸ் டே’ கொண்டாடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும் எனும் கோரிக்கை வலுத்தது.

இதையடுத்து, ‘பஸ் டே’ கொண்டாடியது தொடர்பாக பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் 9 பேர் மீது கீழ்ப்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்துதிருந்தனர். அந்த 9 மாணவர்களையும் பச்சையப்பா கல்லூரி நிர்வாகம் சஸ்பெண்ட் செய்தது.

இந்நிலையில், விபத்து ஏற்பட்ட அந்தப் பேருந்தை இயக்கிய ஓட்டுநரும், நடத்துனரும் ஒழுங்கு நடவடிக்கைக்கு ஆளாகியுள்ளனர். அவர்கள் இருவரும் குரோம்பேட்டையில் உள்ள போக்குவரத்துக் கழக பயிற்சி மையத்திற்கு ஒரு வாரம் செல்லவேண்டும் என மாநகர போக்குவரத்து ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

ஓட்டுநர் லட்சுமணன், நடத்துநர் மருதவமணி ஆகியோர் விசாரணக்கு ஆஜராகவேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவர்கள் பேருந்தைக் கைப்பற்றியதை மாநகர போக்குவரத்துக் கழகத்துக்கும், கட்டுப்பாட்டு மையத்திற்கும் தெரிவிக்காமல் இருந்தது ஏன் என இருவருக்கும் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.

இதுகுறித்து அந்தப் பேருந்தின் ஓட்டுநர் லட்சுமணன், மாணவர்கள் பேருந்தின் மேலே ஏறியதால் தான் ஷெனாய் நகர் அருகே பேருந்தை நிறுத்தி பேருந்தை இயக்கமாட்டேன் எனத் தெரிவித்ததாகவும், டிராஃபிக் போலீசார் போக்குவரத்துக்கு இடையூறு இல்லாமல் நகர்த்தும்படி கூறியதாகவும், மாணவர்கள் மிரட்டியதால் தொடர்ந்து ஓட்டியதாகவும் தெரிவித்துள்ளார்.

இதுபோன்ற வன்முறை நடக்க வாய்ப்பிருக்கும் சமயங்களில் தங்களுக்கு பாதுகாப்பு தேவை என போக்குவரத்து ஊழியர் சங்கத்தினர் சென்னை மாநகர போலீசாரிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.