Tamilnadu

சர்வர் கோளாறால் நிறுத்தப்பட்ட கணினி தேர்வு மீண்டும் நடத்தப்படும் - ஆசிரியர் தேர்வு வாரியம்

முதுகலை கணினி ஆசிரியர் பணியிடங்களுக்கான தேர்வில் குளறுபடி ஏற்பட்டதால் அதற்கான தேர்வு மீண்டும் நடத்தப்படும் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.

தமிழக அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள 814 கணினி ஆசிரியர்கள் பணியிடங்களுக்கு முதன்முறையாக ஆன்லைன் மூலம் தேர்வு நடத்துவதாக ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்தது. இதற்கு 30 ஆயிரத்து 833 பேர் விண்ணப்பித்திருந்தனர். இதில் 23,287 பேர் பெண்களும், 7,564 பேர் ஆண்களும் ஆவர்.

அதன்படி, இன்று தமிழகம் முழுவதும் கணினி ஆசிரியர் தேர்வு சென்னை உட்பட 119 மையங்களில் நடத்தப்பட்டது. சென்னையில் தியாகராய நகர், கீழ்ப்பாக்கம், அடையாறு என 3 பகுதிகளில் தேர்வு நடைபெற்றது.

தேர்வு நடைபெற்ற நெல்லை, சிவகங்கை, திருச்செங்கோடு உள்ளிட்ட சில பகுதிகளில் தொழில்நுட்பக் கோளாறால் தேர்வர்களால் தேர்வெழுத முடியாத நிலை ஏற்பட்டது.

ஆகையால், இதற்கான மறுத்தேர்வு நடத்தப்படும் என்றும், தேர்வு நடைபெறும் தேதி, இடம் குறித்து இணையதளத்திலும், குறுஞ்செய்தி வாயிலாகவும் அறிவிக்கப்படும் எனவும் ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.