Tamilnadu

குறைந்த விலைக்குக் கேட்கும் ஏற்றுமதியாளர்கள் : ராமேஸ்வரம் மீனவர்கள் ஸ்ட்ரைக்!

மீன் ஏற்றுமதியாளர்கள் தங்களிடம் மீன், இறால் வகைகளை குறைந்த விலைக்கு கேட்பதாக ராமேஸ்வரம் மீனவர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

மீன்பிடி தடைக்காலம் கடந்த ஜூன் 14-ம் தேதியோடு முடிவடைந்ததையடுத்து மன்னார் வளைகுடா, பாக்ஜலசந்தி ஆகிய பகுதிகளில் இறால், நண்டு மற்றும் பல்வேறு வகையான மீன்களை பிடித்துக்கொண்டு மீனவர்கள் நேற்று கரை திரும்பினர்.

இரண்டு மாத தடைகாலம் முடிந்து கடலுக்குச் சென்றதால் மீன், இறால், நண்டு ஆகியவை அதிகளவில் மீனவர்களின் வலையில் சிக்கின. இந்நிலையில் அதிக வரத்து காரணமாக ஏற்றுமதியாளர்கள் மீன், இறால், நண்டு ஆகியவற்றை குறைந்த விலைக்கு கேட்டுள்ளனர்.

ஏற்றுமதியாளர்கள் ஒன்றாக இணைந்து சிண்டிகேட் அமைத்து குறைந்த விலைக்கு கேட்பதாக குற்றம்சாட்டிய மீனவர்கள், இந்த விவகாரத்தில் அரசு தலையிட்டு நடவடிக்கை எடுக்கவேண்டும் என வலியுறுத்தி காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.