Tamilnadu
“தமிழில் பேசக்கூடாது என்ற அறிவிப்பின் உள்நோக்கம் அபாயகரமானது” - முத்தரசன் சாடல்!
ரயில்வே அதிகாரிகள் இனி தமிழில் பேசக்கூடாது என்ற ரயில்வே துறையின் அறிவிப்புக்கு தலைவர்கள் பலரும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். மேலும் இந்த நடவடிக்கை குறித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் அறிக்கை வெளியிட்டுள்ளார் .
அதில் அவர் கூறியதாவது,”தெற்கு ரயில்வேயில் பணியாற்றும நிலைய அதிகாரிகளும், அனைத்துப் பிரிவுகளின் கட்டுப்பாட்டு அதிகாரிகளும் இந்தி அல்லது ஆங்கிலத்தில்தான் தொடர்பு கொள்ள வேண்டும். தவறான புரிதல் ஏற்படாமல் தடுப்பதற்காக, தமிழில் பேசக் கூடாது” என்று ரயில்வேயின் முதன்மை போக்குவரத்து திட்ட மேலாளர் சுற்றறிக்கை அனுப்பியிருக்கிறார். பயணிகளின் பாதுகாப்பு பற்றிய உத்தியாகப் பார்வைக்கு இது தெரிந்தாலும், அதன் உள்நோக்கம் அபாயகரமானது.
தமிழ் நாட்டைச் சேர்ந்தவர்களும் அயல் மாநிலங்களில் பணிபுரிகிறார்கள். ஆனால் இந்தியைக் கற்றுக்கொண்டு, அவர்கள் மொழியில் பேசி அம்மாநில மக்களுடன் இயங்குகின்றனர். ஆனால் தமிழ் நாட்டுக்கு வடமாநிலத்தவர் பணிபுரிய வந்தால் இங்குள்ள மக்கள் இந்தியைக் கற்றுக்கொண்டு அவர்களோடு பேச வேண்டும் என்ற நியதி வகுக்கப்படுவது தன்னியல்பானது அல்ல.
தற்போது தமிழகத்தில் உள்ள அனைத்து ரயில் நிலையங்களிலும், தமிழ் நாட்டுப் பயணிகள் அந்நியப்படுத்தப்பட்டு வருகிறார்கள். தமிழையோ, ஊரின் பெயரையோ கூட புரிந்து கொள்ள முடியாதவர்கள், பயணச்சீட்டு வழங்கும் பணியில் உள்ளனர். தமிழில் பேசமுடியாத, புரிந்துகொள்ள முடியாதவர்கள் ரயில்வே காவலர்களாக இருக்கின்றனர். இப்போது தகவல் தொடர்பும் தமிழில் கூடாது என அதிகாரிகளுக்கு உத்தரவிடப்படுகிறது. தாய் மொழியில் பேசி ஒரு டிக்கெட் எடுக்க முடியாது, தான் நினைப்பதை காவலர்களிடம் பேச முடியாது என்று அகதிகள் நிலைக்கு தமிழர்கள் தள்ளப்படுவது ஏன்?
இந்திய ஒற்றுமைக்கும், ஒருமைப்பாட்டுக்கும் நேர் விரோதமான பாதையில் மத்திய அரசு செல்வதை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழு கண்டனம் செய்கிறது. தமிழகத்திலுள்ள அனைத்து ரயில் நிலையங்களிலும் தமிழில் எழுதப் படிக்கத் தெரிந்தவர்களைக் கொண்டே அனைத்துப் பணிகளையும் மேற்கொள்ள விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்துகிறது” என அவர் தெரிவித்துள்ளார்.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!