Tamilnadu
ராஜராஜ சோழன் பற்றி இயக்குனர் பா.ரஞ்சித் கூறிய கருத்து தவறானதல்ல : கே.பாலகிருஷ்ணன் பேட்டி
இயக்குனர் பா.ரஞ்சித் கூறிய கருத்து தவறானது அல்ல என்றுதான் நான் கருதுகிறேன். சோழ மண்டலமே அழியும் தருவாயில் உள்ளபோது அந்த மன்னன் வரலாறு தான் தற்போது அவசியமா என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் செய்தியாளர் சந்திப்பின்போது கூறியுள்ளார்.
மேலும் அவர் கூறியதாவது, "இந்திய ரயில்வேயில் பணிபுரியும் ஊழியர்கள் தங்களுடைய மேலதிகாரிகளிடம் பேசும்போது ஆங்கிலம் அல்லது இந்தியில் மட்டுமே பேசவேண்டும் என்று ரயில்வே நிர்வாகம் சுற்றறிக்கை வெளியிட்டுள்ளது. ரயில்வே அதிகாரிகள் தமிழில் பேச தடை விதிக்கும் தெற்கு ரயில்வேயின் சுற்றறிக்கைக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.
தமிழ் மொழியை உதாசீனப்படுத்தினால் பல்வேறு தரப்பினரையும் திரட்டிப் போராட வேண்டிய நிலை வரும். தமிழ் மீது ஏன் அவர்களுக்கு இவ்வளவு வெறுப்பு என்று தெரியவில்லை. தமிழ்மொழியை எப்படியாவது அழிக்கவேண்டும் என்பதற்காக இதுபோல அறிவிப்புகளை அவர்கள் திட்டமிட்டு வெளியிடுகின்றனர். இது மிகவும் கண்டனத்துக்குரிய செயல்'' என்று குறிப்பிட்டார்.
மோடி ஆட்சியில் பிரச்னைகளுக்கு பஞ்சமில்லை. இன்றைக்கு முறையான செயல்திட்டம் இல்லாததால் தண்ணீரைச் சேமிக்க வழியில்லாமல் அரசால் மக்கள் தவித்து வருகின்றனர். ஏன் கடந்த ஆண்டு முக்கொம்பு அணை சரியாகப் பராமரிக்கப்படாமல், சேமித்து வைத்த தண்ணீர் முழுவதும் வீணாகப்போனது. முன்பே அணையை பாதுகாக்க நடவடிக்கை எடுத்திருந்தால் டெல்டா விவசாயிகளின் தண்ணீர் பற்றாக்குறை ஓரளவு குறைந்திருக்கும்.
மக்களைப் பற்றி முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு எந்தவித அக்கறையும் இல்லை. மழை வந்தால் தண்ணீர் திறக்கப்படும் என்று ஒரு பொறுப்பற்ற பதிலை மக்களுக்கு தெரிவிக்கிறார்கள். மழை பெய்தால் தான் தண்ணீர் கொடுப்போம் என்றால் காவிரி மேலாண்மை ஆணையம் எதற்கு என கேள்வி எழுப்பியுள்ளார்.
சென்னை போன்ற பெரு நகரங்களில் தண்ணீர் இல்லாமல் ஐ.டி நிறுவனங்கள், தொழிற்சலைகள் மூடப்பட்டு வருகின்றன. மேலும் 20 ஆயிரம் உணவகங்கள் மூடப்பட்டுள்ளதாக தகவல் வந்துள்ளது. இதே நிலை நீடித்தால் தமிழ்நாடு சுடுகாடாகத்தான் காட்சியளிக்கும். தண்ணீர் பிரச்னையை தீர்க்க நடவடிக்கை எதுவும் மேற்கொள்ளாமல் ஆளும் அரசுகள் காவிரி - கோதாவரி நதியை இணைக்கப்போகிறோம் என மக்களை ஏமாற்றும் விதமாக புதிய திட்டங்களை பேசித் திரிகிறார்கள்.
மேலும் பேசிய அவர், கூடங்குளம் போராளி சுப.உதயகுமாரை ஒரு தீவிரவாதி போல் தமிழக அரசு பார்க்கிறது. அந்தப் போக்கை நிறுத்திக் கொள்ளவேண்டும். கூடங்குளம் அணு உலையில் அனுக்கழிவுகளை பாதுகாப்பதற்கான தொழில்நுட்பம் கிடையாது. இதனால் லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்படுவார்கள். எனவே அணுக்கழிவுகளை சேமிக்கும் திட்டத்தைக் கைவிட வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதனிடையே இயக்குனர் பா.ரஞ்சித் பற்றிய கேள்விக்கு பதில் அளித்த அவர், "ஒருவரின் கருத்து அவரை சார்ந்தது, அதை இவ்வளவு பெரிய பிரச்னையாக மாற்றவேண்டிய அவசியமில்லை. மேலும் ஒரு இயக்குனர் எப்படி பேசலாம் என தனது தவறுகளை மறைப்பதற்கு அரசும் இந்த பிரச்னையை கையில் எடுத்துள்ளது. தமிழகத்தில் சோழ மண்டலத்தை ராஜராஜ சோழன் போன்ற பல மன்னர்கள் ஆட்சி செய்துள்ளனர். சோழமண்டலத்தை உருவாக்கியதில் ராஜராஜ சோழன் முக்கியப் பங்கு வகிக்கிறார்.
மேலும், அந்தக் காலத்தில் ஏழை மக்கள் மீது கால்நடை வளர்ப்புக்கு வரி போடப்பட்டுள்ளது. 33 வகையான வரிகள் இருந்துள்ளன. 33 வரி விதிப்பு என்பது சாதாரணமா? மன்னர் என்பதால் அவர்கள் செய்த அனைத்தும் சரியாக இருந்தது என்று கருதமுடியாது. பா.ரஞ்சித் கூறிய கருத்து தவறானதல்ல என்றுதான் நான் கருதுகிறேன். மேலும் தண்ணீர் பிரச்சனை, மத்திய அரசின் தவறான திட்டம் என இந்த சோழ மண்டலமே அழியும் தருவாயில் உள்ளபோது அந்த மன்னன் பற்றிய வரலாறு தான் தற்போது அவசியமா என கேள்வி எழுப்பியுள்ளார் கே.பாலகிருஷ்ணன்.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!