Tamilnadu
நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களை வடிகட்ட சதி : வைகோ கடும் கண்டனம்!
நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களிடம் விண்ணப்பத்தில் +2 தேர்வு எழுதிய தேர்வு மைய நுழைவுச் சீட்டு, பெற்றோரின் சான்றிதழ் என தேவையில்லாத சான்றிதழ்கள் இணைக்கப்பட வேண்டும் என்று பட்டியல் தரப்பட்டுள்ளது. இதுகுறித்து ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அதில்அவர் தெரிவித்ததாவது, "மருத்துவப் படிப்புகளுக்கு ‘நீட்’ நுழைவுத் தேர்வைக் கட்டாயமாக்கி சாதாரண எளிய குடும்பப் பின்னணி கொண்ட மாணவர்களின் கனவைத் தகர்த்து எறிந்தது பா.ஜ.க. அரசு. தமிழக சட்டமன்றத்தில் ‘நீட்’ தேர்வில் இருந்து விலக்கு அளிக்கும் சட்ட முன்வரைவு நிறைவேற்றப்பட்டு மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டதை, ஒரு பொருட்டாகவே பா.ஜ.க. அரசு கருதவில்லை; குப்பைக் கூடையில் வீசி எறிந்து விட்டது.
‘நீட்’ தேர்வால் மருத்துவக் கல்வி கிடைக்காமல் போனதால் அனிதா, பிரதீபா, சுபஸ்ரீ, ரிதுஸ்ரீ, வைஷ்யா, மோனிஷா போன்ற மாணவிகள் தற்கொலை செய்து கொண்டனர். இந்நிலையில் ‘நீட்’ தேர்வு எழுதி வெற்றி பெற்றவர்கள் இணையம் மூலம் விண்ணப்பத்தைத் தரவிறக்கம் செய்து மருத்துவப் படிப்புகளுக்கு விண்ணப்பிக்கலாம் என்று தமிழ்நாடு மருத்துவக் கல்வி இயக்குனரகம் அறிவித்தது.
அதன்படி, விண்ணப்பத்தைத் தரவிறக்கம் செய்த மாணவர்களுக்குக் கடும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. விண்ணப்பத்தில் எந்தெந்தச் சான்றிதழ்கள் இணைக்கப்பட வேண்டும் என்று பட்டியல் தரப்பட்டு இருக்கின்றது. அதில் 5-ஆவது வரிசை எண்ணில், +2 தேர்வு எழுதியபோது அளிக்கப்பட்ட தேர்வு மைய நுழைவுச் சீட்டு (HSC Hall Ticket) கேட்கப்பட்டு இருக்கின்றது.
கடந்த ஆண்டும், அதற்கு முன்பும் +2 தேர்வு எழுதியவர்கள், ‘நீட்’ தேர்வில் குறைந்த மதிப்பெண் பெற்றவர்கள் மீண்டும் முயற்சிக்கும் வகையில் இந்த ஆண்டு ‘நீட்’ தேர்வு எழுதி இருக்கின்றனர். அவர்களிடம் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு +2 எழுதிய தேர்வு மைய நுழைவுச் சீட்டு கேட்டால் எங்கே போவார்கள்? அதைக் கேட்க வேண்டிய தேவை என்ன?
அதேபோல வரிசை எண். 14-இல் பெற்றோரின் சான்றிதழ்களின் நகல் இணைக்க வேண்டும் என்று குறிக்கப்பட்டுள்ளது. அதில் ‘நீட்’ தேர்வு எழுதிய மாணவர்களின் பெற்றோரின் பிறப்புச் சான்றிதழ், கல்விச் சான்றிதழ்கள், சாதிச் சான்றிதழ் கேட்கப்பட்டு இருக்கின்றது.
பெற்றோரின் பிறப்புச் சான்றிதழ் கேட்க வேண்டிய தேவை என்ன? இருப்பிடச் சான்றாக குடும்ப அட்டை அல்லது ஆதார் போன்றவை இணைக்கப்பட்டால் போதுமானது.
இதுபோன்ற சான்றுகளுடன் ஜூன் 20-ஆம் தேதிக்குள் ஆன்லைனில் விண்ணப்பம் செய்ய வேண்டும் என்று தெரிவித்து மருத்துவக் கல்லூரி மாணவர் சேர்க்கை பற்றிய அறிவிப்பு வெளியிடப்பட்டு இருக்கின்றது.
+2 தேர்வு மைய நுழைவுச் சீட்டு, பெற்றோர் படிப்புச் சான்றிதழ் போன்றவற்றைக் கேட்பதன் மூலம் ‘நீட்’ தேர்வில் தகுதி பெற்றுள்ள மாணவர்களையும் ‘வடிகட்டி’ வாய்ப்பை மறுக்கும் சதியோ இவை என்றுதான் கருத வேண்டி இருக்கின்றது. இது வன்மையான கண்டனத்துக்குரியது.
தமிழக அரசு உடனடியாக இதில் தலையிட்டு மாணவர்களுக்கு மன உளைச்சல் ஏற்படுத்தும் வகையில், மருத்துவப் படிப்பு விண்ணப்பங்களில் தேவை இல்லாத சான்றுகளை இணைக்க வெளியிட்டுள்ள அறிவிப்பைத் திருப்பப்பெற வேண்டும் என்று வலியுறுத்துகின்றேன்” வைகோ தெரிவித்துள்ளார்.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!