Tamilnadu

நடிகைகள் காணாமல் போனால்தான் காவல்துறை நடவடிக்கை எடுக்குமா? சென்னை உயர்நீதிமன்றம் கண்டனம் !

சேலம் மாவட்டத்தை சேர்ந்த மகேஸ்வரி என்பவர் கடந்த பிப்ரவரி மாதம் 14 ம் தேதி தனது 19 வயது மகள் கவுசல்யா காணமல் போனதாக திருசெங்கோடு புறநகர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த புகார் மீது உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என கோரி மகேஸ்வரி சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில், ”கடந்த பிப்ரவரி மாதம், முதல் எனது மகளை காணவில்லை எங்கு சென்றார் என்ற தகவல் இல்லை. இந்நிலையில் என் மகளை மீட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த காவல்துறைக்கு உத்தரவிட வேண்டும்” என மனுவில் தெரிவித்துள்ளார்.

இந்த வழக்கு நீதிபதிகள் என்.கிருபாகரன், அப்துல் குத்தூஸ் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் மனு தொடர்பாக சம்பந்தப்பட்ட காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் ஆனால் மனுகுறித்த விவரங்கள் கிடைக்கவில்லை எனவும் தெரிவித்தார்.

அப்போது, நீதிபதிகள் “ நான்கு மாதத்திற்கு முன் புகார் அளித்தும் காவல் துறை என்ன நடவடிக்கைகள் எடுத்துள்ளீர்கள். சாதாரண மக்கள் புகார் அளித்தால் காவல் துறை நடவடிக்கைகள் இப்படி தான் இருக்குமா?” என கேள்வி எழுப்பினார். மாதம் ஆனால் சம்பளம் வாங்கும் அதிகாரிகள் அதற்கான பணியை செய்ய வேண்டும் எனவும், சம்பந்தப்பட்ட காவல் துறை உறவினர்கள், அல்லது அவர்கள் வீட்டில் இப்படி யாரேனும் காணாமல் போய் இருந்தால் இப்படித்தான் சாதாரணமாக எடுத்து கொள்வார்களா? என கேள்வி எழுப்பினார். நான்கு மாதங்களாக இளம் பெண்ணை மீட்க நடவடிக்கை எடுக்காமல் இருப்பது வருத்தம் அளிப்பதாக நீதிபதிகள் தெரிவித்தனர்.

மேலும் திரைப்பட நடிகைகள் காணாமல் போனதாக புகார் வந்தால் மட்டுமே காவல் துறை செயல்படுமா? என கேள்வி எழுப்பினர். மாதாமாதம் சம்பளம் வாங்கும் அதிகாரிகள் உண்மையுடன் செயல்பட வேண்டும் எனவும் இல்லை என்றால் அதற்கான பலன்களை அவர்கள் அனுபவிப்பார்கள் என நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர்.

இதனையடுத்து இந்த புகார் தொடர்பாக காவல்துறை என்ன நடவடிக்கை எடுத்துள்ளது, விசாரனையின் தற்போதைய நிலைதொடர்பான விவரங்களை அறிக்கையாக வரும் திங்கட்கிழமை சமர்பிக்க உத்தரவிட்டு விசாரணையை அன்றைய தேதிக்கு தள்ளிவைத்தனர்.