Tamilnadu

மதுரை எய்ம்ஸ் அமைப்பதில் இனியும் தாமதம் வேண்டாம்-முதல்வருக்கு சு.வெங்கடேசன் எம்.பி கடிதம்!

மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதற்கான நிலத்தை மாநில அரசு ஒப்படைக்கவில்லை என தகவல் அறியும் உரிமை சட்டம் மூலம் தெரியவந்துள்ளது. இதையடுத்து, நிலத்தை ஒப்படைக்க வேண்டுமென முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு, மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் கடிதம் எழுதியுள்ளார்.

பல ஆண்டுகால கோரிக்கைகளுக்குக் பிறகு, மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்தது. கட்டுமானப்பணி இன்னும் துவங்கப்படாத நிலையில், எய்ம்ஸ் அமைக்க இதுவரை தமிழக அரசு நிலம் ஒப்படைக்கவில்லை என்று தகவல் அறியும் உரிமைச்சட்டம் மூலம் தெரிய வந்துள்ளது.

இது தொடர்பாக, மதுரை திருநகரைச் சேர்ந்த வி.எஸ்.மணி என்பவரின் கேள்விக்கு மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் பதிலளித்துள்ளது. அதில், எய்ம்ஸ் மருத்துவமனை திட்டத்திற்கு நிதி கோடி ஒதுக்கீடு செய்ய மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்து, துவக்கப் பணிகளுக்கு ரூ.5 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால், மருத்துவமனைக்கான நிலம் இதுவரை தமிழக அரசால் ஒப்படைக்கப்படவில்லை என சுகாதார அமைச்சகம் தெரிவித்திருக்கிறது.

இதுகுறித்து, மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்குக் கடிதம் எழுதியுள்ளார். அதில், எய்ம்ஸ் அமைப்பதற்கான ஒப்புதலே நீதிமன்றம் தலையிட்டு காலதாமதமாகத்தான் கிடைத்தது. அடிக்கல் நாட்டப்பட்ட பிறகு, இன்னும் நிலம் ஒப்படைக்கப்படவில்லை என்ற செய்தி கவலை அளிக்கிறது.

மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமையவுள்ள இடத்தை மாநில அரசு உடனே ஒப்படைக்க உரிய நடவடிக்கை எடுப்பதுடன், முதல்வர் நேரடியாகத் தலையிட்டு, எய்ம்ஸ் மருத்துவமனை நிறுவுதல் தொடர்பான பணிகளை முடுக்கிவிட வேண்டும்” என வேண்டுகோள் விடுத்துள்ளார்.