Tamilnadu

"சிதம்பரம் மருத்துவக் கல்லூரியில் அரசே கட்டணக் கொள்ளை" - மருத்துவர்கள் குற்றச்சாட்டு

சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கத்தின் பொதுச்செயலாளர் ரவீந்திரநாத் சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது, "தமிழகத்தில் உள்ள அனைத்து மருத்துவக் கல்லூரிகளை விடவும் அண்ணாமலை பல்கலைகழகத்தின் கீழ் இயங்கும் ராஜா முத்தையா மருத்துவக்கல்லூரியில் அதிகபட்ச கல்வி கட்டணத்தை நிர்ணயித்து அரசே கட்டண கொள்ளை நடத்தி வருகிறது.

இதனை எதிர்த்து மாணவர்கள் பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தியும் அரசு செவிசாய்க்கவில்லை. எனவே சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரியை அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் இருந்து பிரித்து டாக்டர் எம்.ஜி.ஆர் மருத்துவப் பல்கலைக் கழகத்தோடு இணைந்து மற்ற அரசு மருத்துவக் கல்லூரிகளில் வசூலிக்கும் கட்டணத்தை நிர்ணயிக்க வேண்டும்." என்றார்.

மேலும் "மருத்துவக் கல்லூரிகளில் கூடுதல் இடவசதியை ஏற்படுத்தாமல் 10 சதவீத இடஒதுக்கீடு பொதுப்பிரிவினருக்கு மருத்துவ இடஒதுக்கீடு அளிக்கப்படும் என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் கூறி இருப்பது ஏற்கத்தக்கதல்ல. மருத்துவக் கல்லூரி மாணவர் சேர்க்கைக்கு தமிழக அரசு தனியாக மாநில பாடத்திட்டத்தில் தனி தேர்வு நடத்த வேண்டும்", என்றார்.