Tamilnadu

மத்திய அரசின் திட்டங்களால் தமிழகத்திற்கு தொடர் ஆபத்து : வைகோ எச்சரிக்கை

தமிழகத்தை பாலைவனமாக மாற்ற முயற்சிக்கும் மத்திய அரசின் திட்டங்களுக்கு எதிராக வரும் 12-ம் தேதி, ம.தி.மு.க, தி.மு.க உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் பங்கேற்கும் மனிதச் சங்கிலி போராட்டம் நடைபெறும் என ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்தார்.

இன்று காலை மதுரை செல்லும் முன் சென்னை விமான நிலையத்தில் வைகோ செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், இந்த ஆண்டும் நீட் தேர்வில் தோல்வியடைந்த மாணவிகள் தற்கொலை செய்துகொண்டது வருத்தமளிப்பதாகவும், தமிழகத்திற்கு நீட் தேர்வு வேண்டாம் என்றும் கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், மத்திய அரசின் திட்டங்களால் தமிழகத்திற்கு தொடர் ஆபத்துகள் வருவதாகத் தெரிவித்தார். ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கடுமையாக எதிர்த்துவரும் நிலையில் தமிழகத்தில் 274 மையங்கள் அமைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது என்றும் அதற்கு ஆதரவாக தமிழக அரசும் செயல்படுவதாக குற்றம்சாட்டினார்.

ஸ்டெர்லைட் படுகொலைக்கு காரணமான தமிழக அரசு, ஸ்டெர்லைட் குழுமத்திற்கு சாதகமான நடவடிக்கைகளையும் தற்போது மேற்கொண்டு வருவதாகக் கூறிய வைகோ, கோதாவரியில் இருந்து காவிரிக்கு தண்ணீர் வரும் என்பதெல்லாம் கானல் நீராகப் போய்விடும் என்றார்.

தமிழகத்தைப் பாலைவனமாக மாற்ற முயற்சிக்கும் மத்திய அரசின் திட்டங்களுக்கு எதிராக வரும் 12-ம் தேதி, ம.தி.மு.க, தி.மு.க உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் பங்கேற்கும் மனிதச் சங்கிலி போராட்டம் விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தில் தொடங்கி ராமேஸ்வரம் வரை சுமார் 596 கி.மீ நடைபெறும் என்ற வைகோ, பொதுமக்களும் இதில் பங்கேற்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார்.