Tamilnadu

எழுவர் விடுதலை குறித்த அமைச்சரவை தீர்மானத்தின் நிலை என்ன? - தமிழக அரசுக்கு ஐகோர்ட் கேள்வி!

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தியின் கொலை வழக்கில், 28 ஆண்டுகளுக்கும் மேலாக சிறை தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை முன்கூட்டியே விடுவிப்பது குறித்து கடந்த 2014-ம் ஆண்டு தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இந்த தீர்மானத்தை ரத்துசெய்யக் கோரி தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், எழுவர் விடுதலை குறித்து தமிழக அரசே முடிவெடுக்கலாம் எனத் தெரிவித்தது. இதற்கிடையில், பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரின் விடுதலை தொடர்பாக தமிழக அமைச்சரவையின் தீர்மானம் ஆளுநர் பன்வாரிலால் புரோகித்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இந்த நிலையில், தங்களை முன்கூட்டியே விடுவிக்கக் கோரி ராபர்ட் ஃபயஸ் மற்றும் ஜெயக்குமார் தரப்பில் 2012ம் ஆண்டு தொடரப்பட்ட வழக்கு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் சுந்தரேஷ், நிர்மல்குமார் அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது ஆளுநர் வசம் உள்ள தீர்மானத்தின் நிலை என்ன என்று கேட்ட நீதிபதிகளின் கேள்விக்கு, எழுவர் விடுதலை குறித்த அமைச்சரவையின் தீர்மானம் ஆளுநரிடம் நிலுவையில் உள்ளதாகவும், அதன் நிலை குறித்து தெரிவிக்க 2 வார காலம் அவகாசம் தேவை எனவும் தமிழக அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர் கோரிக்கை வைத்தார்.

அரசின் கோரிக்கையை ஏற்று இந்த வழக்கு மீதான விசாரணை இரண்டு வாரத்திற்கு ஒத்தி வைக்கப்பட்டது.

இதற்கிடையில், எழுவர் விடுதலை குறித்து உள்துறை செயலாளருக்கு அனுப்பிய கடிதம் குறித்து நளினி தொடர்ந்த வழக்கில் பதில் மனு தாக்கல் செய்வதற்கும் தமிழக அரசு அவகாசம் கோரியதால் 4 வாரத்திற்கு வழக்கு விசாரணையை ஒத்திவைத்தது சென்னை உயர்நீதிமன்றம்.