Tamilnadu

ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்துப் போராடிய 450 விவசாயிகள் மீது வழக்குப்பதிவு 

தமிழகம் மற்றும் புதுவையில் ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டத்திற்கு மக்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு நிலவி வருகிறது. தமிழகத்தில் காவிரி டெல்டா மாவட்டங்களான திருவாரூர், நாகை, புதுக்கோட்டை, கடலூர், விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களில் 244 இடங்களில் ஆய்வு மேற்கொண்டு ஹைட்ரோ கார்பன் எடுப்பதற்கு வேதாந்தா நிறுவனத்திற்கு மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.

விழுப்புரம் முதல் புதுச்சேரி வரை 1,794 சதுர கிலோ மீட்டர் தூரம் கிணறுகள் தோண்டப்பட இருக்கின்றன. இதில் ஸ்டெர்லைட் நிறுவனத்தின் உரிமையாளரான வேதாந்தா நிறுவனம் முக்கிய பங்கு வகிக்கிறது. இத்திட்டத்தை அரசியல் கட்சிகள், விவசாயிகள், சமூக ஆர்வலர்கள் என அனைவரும் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தும் திட்டத்தை கைவிட மத்திய அரசு மறுக்கிறது.

மேலும் மக்களின் எதிர்ப்பை மீறி, நடவு முடிந்த சில நாட்களேயான வயல்களில் பொக்லைன் இயந்திரங்கள் கொண்டு ஹைட்ரோ கார்பன் எடுக்கும் பணியை ஓ.என்.ஜி.சி செய்து வருகிறது. திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி, கோட்டூர், திருத்துறைப்பூண்டி, நீடாமங்கலம், கூத்தாநல்லூர் ஆகிய 5 ஒன்றியங்களில் 16 ஊராட்சிகளில் ஹைட்ரோ கார்பன் எடுக்க ஓ.என்.ஜி.சி தீவிரம் காட்டி வருகிறது.

இதனை எதிர்த்து ஜூன் 1ம் தேதியிலிருந்து டெல்டா மாவட்டங்கள் முழுவதும் தொடர் முழக்க போராட்டத்தில் ஈடுபடப்போவதாக தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் அறிவித்திருந்தது. திருவாரூர் மாவட்டத்தில் 13 இடங்களில் போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டு, ஏற்பாடுகள் நடந்து வந்தது. அதேபோல் திருவாரூரில் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராக போராடிய 450 விவசாயிகள் மீது அனுமதியின்றி போராட்டம் நடத்தியதாக கூறி அவர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

பல இடங்களில் ஒ.என்.ஜி.சிக்கு ஆதரவாக செயல்பட்டுவிட்டு, விவசாயிகளுக்கு எதிராக போலீசார் நடந்துகொள்வதாகவும் புகார் எழுந்தது. போராட்டம் நடத்த அனுமதி மறுத்து போராட்டத்தை ஒடுக்கும் வேலையை மேற்கொள்வதாகவும் அவர்கள் குற்றச்சாட்டியுள்ளனர்.

இதனையடுத்து தன்னெழுச்சியாக நடைபெறும் போராட்டத்தைத் தடுக்க நினைத்தால் போராட்டம் வேறுவடிவத்திற்கு செல்லும் என விவசாயிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். மேலும் இந்த தொடர் போராட்டத்திற்கு மாணவர்கள் இளைஞர்கள் ஒன்றிய வேண்டும் என்று அவர்கள் அழைப்புவிடுத்துள்ளனர்.