Tamilnadu
85-ம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் ‘விடுதலை’ : வைகோ வாழ்த்து!
நீதிக்கட்சியால் தொடங்கப்பட்டு, பின்னர் பெரியாரால் நடத்தப்பட்ட ‘விடுதலை’ இதழ் 85-ம் ஆண்டில் அடியெடுத்து வைப்பதையொட்டி வாழ்த்துத் தெரிவித்துள்ளார் ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ. அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது :
“பெரியார் சுயமரியாதை பிரசார நிறுவனத்தின் வெளியீடாகவும், திராவிடர் கழகத்தின் அதிகாரபூர்வ நாளேடாகவும், பகுத்தறிவு - தமிழர் நலன் காக்கும் பிரச்சார ஏடாகவும், வெளிவந்துகொண்டு இருக்கிற விடுதலை ஏடு 01.06.2019 அன்று 85 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது என்பது தமிழர்கள் அனைவருக்கும் தேனினும் இனிய தித்திப்பான செய்தியாகும்.
விடுதலையின் 85 ஆம் ஆண்டு தொடக்கத்தை கொண்டாடும் வகையில், விடுதலை ஏடு சிறப்பு இதழ் வெளியிட இருப்பதையும், அன்று பெரியார் திடலில் சிறப்புக் கூட்டம் நடத்தி விடுதலையின் இலட்சியப் பயணத்தை நினைவுகூர்ந்து, விடுதலை வாசகர்களுக்கு விருதுகள் வழங்கி சிறப்பிக்க உள்ளதையும் அறிந்து அளவு கடந்த மகிழ்ச்சி கொள்கிறேன்.
அரசு விளம்பரங்கள், நிதி உதவிகள் இல்லாமல், பரபரப்புச் செய்திகளை வெளியிடாமல் முழுக்க முழுக்க பகுத்தறிவு வழியில் தமிழர் நலன் காக்கும் நெறியில் ஓர் இலட்சிய ஏட்டை நடத்துவது என்பது இன்றைய சூழலில் மிகுந்த இடர் நிறைந்தது. எனினும் விடுதலை ஏடு, வணிக ஏடாக இல்லாமல், திராவிடர் இயக்க நலன் காக்கும் இலட்சிய ஏடாக தொடர்ந்து வெளிவந்து, இன்று 85 ஆம் ஆண்டில் பணி தொடர்வதைக் கண்டு மறுமலர்ச்சி தி.மு.கழகத்தின் சார்பிலும், வெள்ளி விழா காண இருக்கும் எங்கள் சங்கொலி ஏட்டின் சார்பிலும் இனிய வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
தமிழ் அறிஞர் டி.ஏ.வி.நாதன், பண்டித எஸ்.முத்துசாமி பிள்ளை, அ.பொன்னம்பலனார், என்.கரிவரதசாமி, சாமி.சிதம்பரனார், குத்தூசி சா.குருசாமி, பேரறிஞர் அண்ணா, அன்னை மணியம்மையார் ஆகியோர்களை ஆசிரியர்களாகக் கொண்டு எழுச்சி நடைபோட்டு வந்த விடுதலை ஏடு, இன்று தமிழர் தலைவர் மானமிகு அண்ணன் கி.வீரமணி அவர்களை ஆசிரியராகக் கொண்டு தன்மானம் - இனமானம் காக்கும் பணியில் தொடர்கிறது.
நெருக்கடியான காலகட்டத்தில் விடுதலை நாளேட்டை, வார இதழாக மாற்றி நடத்திடலாமா என்று தந்தை பெரியார் தயங்கிக்கொண்டிருந்த வேளையில், முழு நேர பணியாளராக ஊதியம் எதிர்பார்க்காத உத்தமத் தொண்டராக அண்ணன் கி.வீரமணி அவர்கள் தந்தை பெரியாரிடம் வந்து சேர்ந்தார். அய்யா அவர்களும், அண்ணன் கி.வீரமணி அவர்களை அகமகிழ்ச்சியோடு வரவேற்றதோடு, விடுதலை ஏட்டை அவரின் ஏகபோக ஆதிக்கத்தில் ஒப்படைக்கிறேன் என்று விடுதலை (06.06.1964) இதழில் மகிழ்ச்சியுடன் அறிவித்தார்கள்.
அத்தகைய சிறப்புக்குரிய விடுதலை ஏடு, இப்பொழுது பல வண்ணங்களில் பெரியார் எண்ணங்களை பரப்பிடும் நாளிதழாக இணையம் வழியாகவும் உலகம் முழுவதும் ஒரு நொடியில் விரைந்து சென்று அறிவுச் சுடரை அள்ளி வீசி பரப்பி வருகிறது. ஞாயிறு மலர் வாரந்தோறும் விடுதலையின் இணைப்பாக சிறப்புடன் வெளிவந்துகொண்டு இருக்கின்றன. 1956 ஆம் ஆண்டு முதல் செப்டம்பர் 17 பெரியார் பிறந்த நாளில் விடுதலை ஏடு, சிறப்புக் கட்டுரைகள், இயக்க முன்னோடிகள், தலைவர்கள், அறிஞர்கள், பாவலர்கள் ஆகியோரின் ஆய்வுப் படைப்புகள்கொண்ட சிறப்பு மலரை ஆண்டுதோறும் தொடர்ந்து வெளியிட்டு வருவது என்பது வரலாற்றுச் சிறப்புமிக்க பணியாகும். விடுதலை வாசகர் வட்டம் பெரியார் திடலில் அறிவு மணம் வீசும் ஆய்வுக் கூட்டங்களை தொடர்ந்து நடத்திக்கொண்டிருக்கிறது.
பல்துறை சிறப்புக்களை தன்னகத்தே கொண்டுள்ள விடுதலை ஏட்டின் சிறப்பினை, விடுதலையின் ஆசிரியராக பணியாற்றிய பேரறிஞர் அண்ணா அவர்கள் திராவிட நாடு இதழில் (27.06.1948) பெருமையுடன் சுட்டிக்காட்டிய வைர வரிகள் என் மனக்கண்ணில் நிழலாடுகிறது. “திராவிடனே! உன் சமுதாயம் சேறும் பாசியும் நிறைந்த குட்டைபோல் ஆகிவிட்டது. சேறும் பாசியும் நிரம்பிய குட்டையில் உள்ள நீரை எவரே விரும்புவர்? அந்த நீர் குடிப்பதற்கோ, குளிப்பதற்கோ முடியாதபடி ஆக்கப்பட்டுவிட்டது. எனவே அதை உபயோகித்து உன் உடலை நோய்க்கு ஆளாகும்படிச் செய்து வதைந்து போகாதே. சேற்றை அகற்றி, பாசியை நீக்கி துப்புரவு செய்து உபயோகப்படுத்திக்கொள் என்று விடுதலை கூறுகிறது.
ஒரு காலத்தில் நீ உன்னத நிலையில் இருந்தாய். இந்நாட்டு ஆட்சி உன்னுடையதாய் இருந்தது. ஆனால் இன்று? நீ ஆண்டியாய் கிடக்கிறாய். வீரனாய் - விறல் வேந்தனாய் - இருந்த நீ கோழையாய் - பூனையைக் கண்டு அஞ்சும் பேதையாகிக் கிடக்கிறாய்! சிம்மாசனத்தில் சிறப்போடு இருந்த நீ இன்று செங்கை ஏந்திச் சேவடி காத்து நிற்கிறாயே! இப்படி நீ ஆனதன் அடிப்படையை உணரவில்லையே! என்று கூறி விளக்கமும், விழிப்பும் உண்டாக்கி வருகிறது விடுதலை.”
அறிஞர் அண்ணா அவர்கள் சுட்டிக்காட்டிய அதே திசையில் பெரியாரின் பணி முடிக்கும் விடுதலை ஏடு வாளாகவும், கேடயமாகவும் தமிழர்களுக்கு துணை நின்று பயணித்து வருகிறது. 85 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் வரலாற்றுச் சிறப்புமிக்க விடுதலை ஏடு, நூற்றாண்டுகள் கடந்து தமிழர் சமுதாயம் வளமும், நலனும், உரிமையும் பெற்றிட தொடர்ந்து களமாட வேண்டும் என்ற விழைவுடன் மறுமலர்ச்சி தி.மு.க. சார்பிலும், நம் சங்கொலி இதழின் சார்பிலும் விடுதலையை வாழ்த்துகிறேன்.
Also Read
-
🔴Live| தேர்தல் முடிவுகள் : ஒரு லட்ச வாக்குகள் வித்தியாசத்தில் பிரியங்கா காந்தி முன்னிலை!
-
திண்டுக்கல் சீனிவாசனின் ஒப்புதல் : “அதிமுக ஊழல் பற்றி இன்னும் சில மாதங்களில் மேலும் உண்மைகளை சொல்வார்”!
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?