Tamilnadu

எங்கே இருக்கிறார் முகிலன் ? 100 நாட்களைக் கடந்தும் தகவல் இல்லை #whereismugilan

சமூக செயற்பாட்டாளரும், தமிழ்நாடு சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளராக இருப்பவர் முகிலன். இவர் ஜல்லிக்கட்டு போராட்டம், ஸ்டெர்லைட் விவகாரம், கூடங்குளம் அணு உலைக்கு எதிரான போராட்டம் என மண்ணை பாதிக்கும் பிரச்சனைக்கான போராட்டங்களில் மிகவும் முக்கியப் பங்காற்றியவர்.

இவர் கடந்த பிப்ரவரி 15-ம் தேதி சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் செய்தியாளர்களை சந்தித்து தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு தொடர்பான முக்கியத் தகவலை அளித்தார். அதில், கடந்த ஆண்டு மே மாதம் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தில் நடந்த வன்முறையில் பொதுமக்களுக்கு எந்தவித சம்பந்தமும் இல்லை. போலீஸ் உயரதிகாரிகள்தான் வன்முறைக்கு காரணம் என்பது தொடர்பான ஆதாரங்களை முகிலன் வெளியிட்டார். பின்னர் பேசிய அவர் இந்த ஆதாரங்களை வெளியிடுவதால் எனது உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்றும் குறிப்பிட்டிருந்தார்.

பத்திரிக்கையாளர் சந்திப்பு முடிவுற்ற பிறகு எழும்பூர் ரயில் நிலையத்திலிருந்து மதுரைக்கு ரயிலில் சென்றுள்ளார். இரவு 10.30 மணிக்கு நண்பர்களுடன் போனில் பேசியுள்ளார். ஆனால், அதற்கு பிறகு அவரிடம் இருந்து எந்தவிதமான தகவலும் வரவில்லை. பாதி வழியில் மாயமானதாக அவரது நண்பர்கள் தெரிவித்தனர். இதனையடுத்து எழும்பூர் ரயில்வே காவல் நிலையத்தில் தமிழ்நாடு மாணவர் மற்றும் இளையோர் கூட்டமைப்பு சார்பில் புகார் கொடுக்கப்பட்டது.

அதன்படி ரயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து முகிலனின் செல்போன் மற்றும் சிசிடிவி கேமரா பதிவுகளை பெற்று விசாரணை நடத்தினர். அப்போது, முகிலன் சம்பவத்தன்று எழும்பூர் ரயில் நிலையத்திற்கு வரும் காட்சிகள் பதிவாகி இருந்தது. மேலும், அவரது செல்போன் சிக்னல் செங்கல்பட்டு வரை இருந்துள்ளது. அதன் பிறகு துண்டிக்கப்பட்டுள்ளது.

மாயமாகி 10 நாட்கள் ஆகியும் முகிலனை ரயில்வே போலீசாரால் கண்டுபிடிக்க முடியவில்லை. இதையடுத்து இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி.,க்கு மாற்ற வேண்டும் என்று திமுக உள்ளிட்ட அரசியல் கட்சிகள் அரசுக்கு கோரிக்கை விடுத்தன. அதன்படி முகிலன் மாயமான வழக்கை, தமிழக டிஜிபி டி.கே.ராஜேந்திரன் சிபிசிஐடிக்கு மாற்றி உத்தரவிட்டார். முகிலனை காணவில்லை என்றும் அவர் குறித்து தகவல் அளிப்போருக்கு தக்க சன்மானம் வழங்கப்படும் என்ற சுவரொட்டியை சிபிசிஐடி மக்களை கூடுமிடங்களில் பிரசுரித்தது.

இந்நிலையில், சூழலியல் போராளியான முகிலன் காணாமல் போய் இன்றுடன் 100 நாள்கள் நிறைவடைந்திருக்கின்றன. 100 நாட்களாகியும் அவர் கண்டுபிடிக்கப்படாததும், அது குறித்து காவல்துறையும், தமிழக அரசும் எந்தவித முயற்சியும் எடுக்காததும் முகிலனுக்கு இந்த அரசால், ஏதும் நிகழ்ந்திருக்குமோ என்கிற அச்சம் எழுந்துள்ளது.

இந்த அச்சத்திற்குக் காரணம், உலகம் முழுவதும் அரசின் மக்கள் விரோத, சூழலியலுக்கு கேடு விளைவிக்கும் திட்டங்களுக்கு எதிராகப் போராடுபவர்களை இந்த அரசுகள் இப்படித்தான் காணாமல் போகச் செய்யும். எனவே அதே பாணியில் முகிலனுக்கும் இந்த அரசு எதாவது தீங்கு இழைத்திருக்குமோ என்கிற கேள்வி எழுந்துள்ளது. இந்த விவகாரம் சமூக ஆர்வலர்களிடையேயும், பொதுமக்களிடையும் பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.