Tamilnadu
தேர்தல் ஆணையத்தின் நம்பகத்தன்மை தகர்ந்துவிட்டது! திருமாவளவன் ஆதங்கம்
தமிழகத்தில் கடந்த ஏப்.,18ம் தேதி 38 தொகுதிகளுக்கான நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற்றது. அதில், சிதம்பரம் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட பொன்பரப்பி பகுதியில் வாக்குப்பதிவு நாளன்று சாதி ரீதியாக தலித் மக்கள் மீதும் அவர்களின் வீடுகள் மீது வன்முறை வெறியாட்டம் நடத்தப்பட்டது.
வன்முறையைக் கட்டவிழ்த்துவிட்டதால் 275 வாக்காளர்கள் வாக்களிக்கவில்லை என குற்றச்சாட்டு எழுந்தது. பொன்பரப்பியில் மறுவாக்குப்பதிவு நடத்தவேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டது. இதனை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், மனுதாரரின் கோரிக்கையை பரிசீலிக்க தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட்டது. அவரது கோரிக்கை தேர்தல் ஆணையத்தால் நிராகரிக்கப்பட்டது.
இது தொடர்பாக இன்று மீண்டும் உயர்நீதிமன்றத்தில் முறையிடப்பட்டுள்ளது. மறுவாக்குப்பதிவு குறித்த இந்த முறையீட்டை ஏற்க மறுத்த உயர்நீதிமன்ற நீதிபதிகள், தேர்தல் வழக்கு மூலமாக அணுக மனுதாரருக்கு அறிவுறுத்தியுள்ளனர்.
இந்த தீர்ப்பு குறித்து சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் திருமாவளவன் செய்தியாளர்களைச் சந்தித்தார். இந்த சந்திப்பின் போது அவர் பேசியதாவது; பொன்பரப்பியில் வாக்களிக்க முடியாதவர்கள் தங்கள் வாக்குகளை செலுத்த வேண்டும் என்று மன்றாடியும் கூட, அதற்கு ஏற்பாடு செய்ய முடியாத நிலையில் தேர்தல் ஆணையம் இருப்பதாக கூறினார்.
வாக்காளர்களின் உரிமைகளை பாதுகாக்கும் தகுதியும், வலிமையும் அற்றதாக தேர்தல் ஆணையம் உள்ளது. ஆளும் கட்சிக்கு சேவை செய்யும் எடுபிடி அமைப்பாக தேர்தல் ஆணையம் செயல்படுவதாக அவர் கடுமையாக விமர்சித்தார். தேர்தல் ஆணையத்தின் மீதான நம்பகத்தன்மை தகர்ந்துவிட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.
Also Read
-
🔴Live| தேர்தல் முடிவுகள் : 2 லட்ச வாக்குகள் வித்தியாசத்தில் பிரியங்கா காந்தி முன்னிலை!
-
திண்டுக்கல் சீனிவாசனின் ஒப்புதல் : “அதிமுக ஊழல் பற்றி இன்னும் சில மாதங்களில் மேலும் உண்மைகளை சொல்வார்”!
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?