Tamilnadu

தமிழகத்தில் வாக்கு எண்ணிக்கைக்கான விதிமுறைகளை அறிவித்தார் சத்ய பிரதா சாஹூ!

நாடுமுழுவதும் நடைபெற்ற நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் மே 23ம் தேதி எண்ணப்படுகிறது. இதற்கான பாதுகாப்பு பணிகள் மற்றும் வாக்கு எண்ணுவதற்கான நெறிமுறைகளை தேர்தல் ஆணையம் அறிவித்து வருகிறது.

அந்த வகையில், தமிழகத்தில் கடந்த ஏப்.,18 மற்றும் மே 19ல் நடந்த தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணுவதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இது தொடர்பாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாஹூ அறிவிப்பு ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.

சத்ய பிரதா சாஹூ வெளியிட்டுள்ள அறிவிப்பில்,

1) தமிழகம் முழுவதும் 45 வாக்கு எண்ணும் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. வாக்கு எண்ணிக்கையின் போது ஒரு வேட்பாளருக்கு 16 முகவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவர்.

2) மே 23 அன்று, காலை 8 மணிக்கு வாக்கு எண்ணும் பணி தொடங்கும். அதற்கு ஒரு மணிநேரத்திற்கு முன்பாகவே அதிகாரிகளும், முகவர்களும் மையத்திற்குள் வந்து தத்தம் இடங்களில் அமர்ந்துவிட வேண்டும்.

3) வாக்கும் எண்ணிக்கையின் ஒவ்வொரு சுற்று முடிந்த பின்னர் அதன் முடிவுகள் தேர்தல் ஆணையத்தின் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படும்.

4) உச்ச நீதிமன்றத்தின் ஆணைப்படி, குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட 5 விவிபாட் இயந்திரங்கள் கடைசியாக எண்ணப்படும். இடையில், வாக்கு எண்ணும் போது இயந்திரங்களில் பழுது ஏற்பட்டால் விவிபாட் இயந்திரங்களை கொண்டு வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் தெரிவிக்கப்படும்.

5) வாக்குச்சாவடி முகவர்கள் செல்போன் மற்றும் பேனா (எழுதுகோல்) எடுத்துச் செல்ல அனுமதி இல்லை. பேப்பரும் பென்சில் மட்டுமே உபயோகப்படுத்த வேண்டும்

6) மேலும் ஒரு நாடாளுமன்றத் தொகுதியில் 6 சட்டமன்றத் தொகுதிகள் இருந்தால் அந்த 6 தொகுதிக்கான வாக்குகளும் ஒன்றாக எண்ணப்படும்.

இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.