Tamilnadu
டெல்டா மக்களை அகதிகளாக ஆக்கும் ஹைட்ரோ கார்பன் திட்டம் : 7வது நாளாக விவசாயிகள் போராட்டம்!
தமிழகம் மற்றும் புதுவையில் ஹைட்ரோகார்பன் எடுக்கும் திட்டத்திற்கு மக்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு நிலவி வருகிறது. தமிழகத்தில் காவிரி டெல்டா மாவட்டங்களான திருவாரூர், நாகை, புதுக்கோட்டை, கடலூர், விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களில் 244 இடங்களில் ஆய்வு மேற்கொண்டு ஹைட்ரோ கார்பன் எடுப்பதற்கு வேதாந்தா நிறுவனத்திற்கு மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.
விழுப்புரம் முதல் புதுச்சேரி வரை 1,794 சதுர கிலோ மீட்டர் தூரம் கிணறுகள் தோண்டப்பட இருக்கின்றன. இதில் ஸ்டெர்லைட் வேதாந்தா நிறுவனம் முக்கிய பங்கு வகிக்கிறது. அரசியல் கட்சிகள், விவசாயிகள், சேவை சங்கங்கள் அனைவரும் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தும் திட்டத்தை கைவிட மத்திய அரசு மறுக்கிறது.
மேலும் மக்களின் எதிர்ப்பை மீறி, நடவு முடிந்த சில நாட்களேயான வயல்களில் பொக்லைன் இயந்திரங்கள் கொண்டு ஹைட்ரோ கார்பன் எடுக்கும் பணியை ஓ.என்.ஜி.சி செய்து வருகிறது. திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி, கோட்டூர், திருத்துறைப்பூண்டி, நீடாமங்கலம், கூத்தாநல்லூர் ஆகிய 5 ஒன்றியங்களில் 16 ஊராட்சிகளில் ஹைட்ரோ கார்பன் எடுக்க ஓ.என்.ஜி.சி தீவிரம் காட்டி வருகிறது.
இதனால் 5 ஒன்றியங்களிலும் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். தொடர்ந்து 7வது நாளாக விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தற்பொழுது மன்னார்குடி அருகே ஹைட்ரோ கார்பன் கிணறு அமைய உள்ள அரிச்சபுரம் ஊராட்சியில், ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கைவிட வேண்டும். டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும் என வலியுறுத்தி விவசாயிகள், பெண்கள், விவசாய தொழிலாளர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றிய செயலாளர் நடேச தமிழார்வன் தலைமையில் குறுவை பயிரிடப்பட்ட வயலில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர். மக்களுக்கு எதிரான மத்திய அரசின் திட்டங்களை மாநில அரசு தடுக்க வேண்டும் என அவர்கள் கோஷமிட்டனர்.
இது குறித்து நடேச தமிழார்வன் செய்தியாளர்க்கிடம் கூறியதாவது;, ஹைட்ரோ கார்பன் திட்டத்தை மத்திய அரசு மாநில அரசின் துணையோடு டெல்டா மக்களின் மீது நடத்தப்படும் கொடூரமான தாக்குதல். காவிரி டெல்டாவை எப்படியாவது பாலைவனமாக்கி அதில் வாழும் லட்சக் கணக்கான மக்களை அகதிகளாக ஆக்குவதற்கு மத்திய அரசு மீத்தேன் திட்டம், ஷெல் எரிவாயு திட்டம், ஹைட்ரோ கார்பன் திட்டம் என பல்வேறு பெயர்களில் செயல்படுத்திட முயற்சிக்கிறது. அதற்கு தமிழகத்தில் தற்போதுள்ள பலவீனமான அரசை தன் போக்கிற்கு வளைத்து களத்தில் இறங்கி உள்ளது. என அவர் தெரிவித்தார்.
பின்னர் அரிச்சபுரம் கிராமத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஒருங்கிணைப்பில் அனைத்து கட்சி நிர்வாகிகள், தமிழ்நாடு விவசாய சங்கம், விவசாய தொழிலாளர் சங்கம், பெண்கள் ஆகியோர் பங்கேற்ற போராட்ட ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் போராட்டத்தை தொடர்ந்து நடத்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
Also Read
-
பாலஸ்தீனத்தில் மனித உயிர்கள் கொல்லப்படுவது துயரமானது, இஸ்ரேல் நிறுத்திக் கொள்ள வேண்டும் - முரசொலி !
-
”தவறான நோக்கத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு” : இந்தியில் நடத்த கோரிய மனுவை தள்ளுபடி செய்த உச்சநீதிமன்றம்!
-
”தொழில் தொடங்க தமிழ்நாட்டிற்கு வாருங்கள்” : மலேசியா தமிழ்ச் சங்கத்தில் பேரவைத் தலைவர் அப்பாவு பேச்சு!
-
”தமிழ் குறித்து எங்களுக்கு எவரும் பாடம் எடுக்க வேண்டியதில்லை” : அமைச்சர் கீதா ஜீவன்
-
சென்னை மாணவர்களுக்கு Good News : இன்று திறக்கப்பட்ட ’முதல்வர் படைப்பகம்’ - 5 முக்கிய சிறப்புகள் என்ன?