Tamilnadu
தமிழகம் முழுவதும் 43 இடங்களில் நடைபெறும் வாக்கு எண்ணிக்கை!
தமிழகத்தில் வேலூர் தவிர்த்து 38 மக்களவை தொகுதிகளுக்கும் கடந்த 18-ந்தேதி தேர்தல் நடைபெற்றது. 18 தொகுதிகளுக்கான சட்டமன்ற இடைத்தேர்தலும் அதே நாளில் நடத்தப்பட்டது. அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம், ஒட்டப்பிடாரம், சூலூர் ஆகிய 4 சட்டசபை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் நேற்று(19.05.2019) நடைபெற்றது.
வாக்கு எண்ணிக்கை வருகிற 23-ந்தேதி நடை பெறுகிறது. தமிழகம் முழுவதும் 43 இடங்களில் வாக்குகள் எண்ணப்படுகின்றன. சென்னையில் 3 மையங்களில் வாக்கு எண்ணிக்கை நடை பெறுகிறது. மத்திய சென்னையில் பதிவான வாக்குகள் லயோலா கல்லூரியிலும், வட சென்னையில் பதிவான ஓட்டுகள் ராணி மேரி கல்லூரியிலும், தென் சென்னை ஓட்டுகள் கிண்டி அண்ணா பல்கலைக் கழகத்திலும் எண்ணப்படுகின்றன.
தமிழகம் முழுவதும் ஓட்டு எண்ணிக்கைக்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. ஒரு லட்சம் போலீசார் கண்காணிப்பு பணிகளில் ஈடுபடுகிறார்கள். சென்னையில் 15 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணிகளை மேற் கொள்கிறார்கள். பதட்டமான வாக்கு எண்ணும் மையங்களில் கூடுதல் பாதுகாப்புக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
வாக்கு எண்ணும் மையங்களில் துணை ராணுவ படையினர், மாநில போலீசார், சிறப்பு படை போலீசார் ஆகியோர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அனைத்து மையங்களிலும் 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
வாக்கு எண்ணிக்கை 23ம் தேதியன்று காலை 7.30 மணிக்கு தொடங்குகிறது. முதலில் தபால் ஓட்டுகள் எண்ணப்படும். அது முடிவடைந்ததும் மின்னணு எந்திரங்களில் பதிவான ஓட்டுகளை எண்ணும் பணி காலை 8.30 மணி அளவில் தொடங்கும்.
இதற்காக வாக்கு எண்ணும் மையங்களில் 14 மேஜைகள் வரை போடப்பட்டு இருக்கும். ஒரு கண்காணிப்பாளர், உதவியாளர், நுண் பார்வையாளர் ஆகியோரது மேற்பார்வையில் ஓட்டுகள் எண்ணப்படும்.
ஒவ்வொரு வாக்கு எண்ணும் மையத்திலும் வேட்பாளர்களின் முகவர்கள் பணியில் இருப்பார்கள். வாக்கு எண்ணும் பணியில் ஈடுபட்டுள்ள ஊழியர்கள் மின்னணு எந்திரங்களை அவர்களிடம் காட்டிய பின்னரே ஓட்டு எண்ணும் பணியை தொடங்குவார்கள்.
எப்போதும், வாக்கு என்ன தொடங்கிய அடுத்த ஓரிரு மணி நேரங்களிலே முன்னணி நிலவரங்கள் தெரிய வரும். மதியம் 1 மணி அளவில் மத்தியில் ஆட்சி அமைக்கப்போவது யார் என்பது தெரிந்து விடும். ஆனால், இந்த தேர்தலில் வாக்குப்பதிவின் போது யாருக்கு ஓட்டு போட்டோம் என்பதை வாக்காளர்கள் தெரிந்து கொள்ளும் வகையில் “விவிபேட்” என்கிற ஒப்புகை சீட்டு எந்திரமும் பொருத்தப்பட்டு இருந்தது.
இந்த எந்திரத்தில் பதிவான வாக்குகளையும், மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் பதிவான ஓட்டுகளையும் 10 சதவீதம் அளவுக்கு ஒப்பிட்டு பார்த்த பின்னரே முடிவுகள் வெளியிடப்படும். இதனால் இறுதி முடிவுகள் வெளியாவதில் சற்று தாமதம் ஏற்படவும் வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. இருப்பினும் 23-ந்தேதி இரவுக்குள் வெற்றி பெற்றவர்களின் பெயர்கள் தெரிய வந்து விடும் என்றே தேர்தல் அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
Also Read
-
🔴Live| தேர்தல் முடிவுகள் : ஜார்க்கண்டில் பெரும்பான்மையை தாண்டியது இந்தியா கூட்டணி !
-
திண்டுக்கல் சீனிவாசனின் ஒப்புதல் : “அதிமுக ஊழல் பற்றி இன்னும் சில மாதங்களில் மேலும் உண்மைகளை சொல்வார்”!
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?