Tamilnadu

குழந்தை விற்பனை : செவிலியர் அமுதா குழுவை 7 நாட்கள் போலீஸ் காவலில் விசாரிக்க உத்தரவு!

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் குழந்தை விற்பனை விவகாரத்தில் செவிலியர் அமுதா, கொல்லிமலை ஆம்புலன்ஸ் ஓட்டுநர் முருகேசன் மற்றும் ஈரோட்டைச் சேர்ந்த தரகர் அருள்ஜோதி ஆகியோர் அடங்கிய குழுவை 7 நாட்கள் போலீஸ் காவலில் விசாரிக்க அனுமதி வழங்கியுள்ளது நீதிமன்றம்.

செவிலியர் உதவியாளராகப் பணியாற்றி விருப்ப ஓய்வு பெற்ற ராசிபுரத்தைச் சேர்ந்த அமுதா தர்மபுரியை சேர்ந்த ஒருவரிடம் குழந்தையை விற்பனை செய்வது தொடர்பாக பேசிய ஆடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

இதையடுத்து, செவிலியர் அமுதா மற்றும் அவரது கணவர் ரவிச்சந்திரன் ஆகியோரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில், குழந்தை விற்பனையில் அவருக்கு உதவியாக இருந்த கொல்லிமலை அரசு மருத்துவமனை ஆம்புலன்ஸ் டிரைவர் முருகேசன் மற்றும் ஈரோட்டைச் சேர்ந்த தரகர் அருள்ஜோதி ஆகியோரும் கைது செய்யப்பட்டனர்.

குழந்தைகள் விற்பனை தொடர்பாக நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த 3 பெண்களிடமும் தீவிர விசாரணை நடைபெற்று வந்தது. விசாரணையைத் தொடர்ந்து 3 பெண்களையும் போலீசார் கைது செய்துள்ளனர்.

இந்த வழக்கில் சம்பந்தப்பட்டவர்களை தனித்தனியாக 10 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரணை நடத்த நாமக்கல் மாவட்ட தலைமை நீதிமன்றத்தில் சிபிசிஐடி மனு அளித்திருந்தது. இந்த மனுவை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம், கைது செய்யப்பட்டுள்ள அமுதா உள்ளிட்ட கடத்தல் கும்பலை 7 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி அளித்துள்ளது.