Tamilnadu

3,562 நீதிபதிகள் எழுதிய தேர்வில் ஒருவர் கூட தேர்ச்சி பெறவில்லை - அதிர்ச்சித் தகவல்

மிழ்நாடு அரசுப்பணியாளர்கள் தேர்வாணையம் சார்பில் மாவட்ட நீதிபதிகளின் காலிப்பணியிடங்களுக்கான தேர்வு அறிவிப்பை ஜனவரி மாதத்தில் வெளியிடப்பட்டது. இதில் தமிழகம் முழுவதும் உள்ள 31 மாவட்ட நீதிபதிகள் பணியிடங்களுக்கான முதல்நிலைத் தேர்வு ஏப்ரல் 7ம் தேதி நடைபெற்றது.

இந்த முதல் நிலைத் தேர்வுக்காக உரிமையியல் நீதிபதிகள், வழக்கறிஞர்கள் விண்ணப்பித்தனர். மொத்தம் 3 ஆயிரத்து 562 பேர் பங்கேற்றுத் தேர்வு எழுதினார்கள். இந்நிலையில், தேர்வு எழுதிய 3,562 பேரில் ஒருவர் கூட தேர்ச்சி பெறவில்லை என்பது தெரிய வந்துள்ளது.

இந்தத் தேர்வில் பொதுப் பிரிவினருக்கு 60 மதிப்பெண்களும், பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு 52.5 மதிப்பெண்களும் பட்டியல் மற்றும் பட்டியல் பழங்குடியினர் பிரிவினருக்கு 45 மதிப்பெண்கள் பெற வேண்டும் என்று நிர்ணயிக்கப்பட்டது.

மேலும் தேர்வு எழுதியவர்களில் 95% பேர் மைனஸ் மதிப்பெண்கள் பெற்றுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதுவரை இல்லாத அளவிற்குக் கேள்விகள் கடினமாக இருந்ததாகவும் தேர்வெழுதியவர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.

முதல்நிலைத் தேர்வில் தேர்ச்சி பெற்றால் மட்டுமே, பிரதான தேர்வில் கலந்து கொள்ள முடியும். இந்த சூழலில் மே 25,26ம் தேதி நடைபெறவிருக்கு தேர்விற்கு வேலையில்லாமல் போனது. இந்த சம்பவம் நீதித்துறை வட்டாரங்களில் அதிர்ச்சியை எற்ப்படுத்தியுள்ளது.

இந்நிலையில், நேற்று விசாரணைக்கு வந்த ஆசிரியர் தகுதித் தேர்வு முடிவுகள் விவகாரத்தில், தேர்வில் தகுதி பெறாத ஆசிரியர்களுக்கு அரசு எந்தவித கருணையும் காட்டக்கூடாது, அவர்கள் பணியில் தொடரக்கூடாது என்று உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.