Tamilnadu

சாலை வசதி கேட்டு 40 வருட போராட்டம்.. கண்டுகொள்ளாத தமிழக அரசு - குமுறும் பழங்குடி மக்கள்

நீலகிரி மாவட்டம், குன்னூரில் இருந்து 30 கி.மீட்டர் தூரத்தில் பில்லூர் மட்டத்தை அடுத்த வனப்பகுதியில் உள்ள கிராமம் தான் சின்னாளக் கொம்பை மலை கிராமம். இந்த பகுதியில் வசிப்பவர்கள் இருளர் சமூகத்தை சேர்ந்தவர்கள்.

கடந்த 19ம் தேதி சின்னாளக் கொம்பை மலை கிராமப் பகுதியில் பலத்த இடியுடன் கூடிய கனமழை பெய்தது. அன்றிரவு விழுந்த மின்னலால் 13 பேர் பாதிப்படைந்துள்ளனர். அதில் சிலருக்கு தீக்காயங்களும், மற்றும் சிலருக்கு கைகால் செயலிழந்துள்ளது. இதனை அறிந்த ஊர் பொதுமக்கள் இலவச ஆம்புலன்ஸ் சேவை '108' தகவல் தெரிவித்துள்ளனர்.

அதனை அடுத்து 17 மணி நேரத்திற்கு பிறகே பாதிக்கப்பட்ட மக்களை ஆம்புலன்ஸ் வாகனத்தில் அழைத்துக்கொண்டு மருத்துவமனைக்கு சென்றுள்ளனர். 17 மணிநேரம் ஏன் தாமதம் என்றால் தகவல் தெரிவித்த நேரத்தில் இருந்து குன்னூர் அரசு மருத்துவமணையில் இருந்து கிளம்பிய வாகனம் பில்லூர் மாவட்டம் வரை வந்துட்டது. அங்கிருந்து 7 கிலோமீட்டர் தொலைவில் உள்ள சின்னாளக் கொம்பைக்கு சாலை வசதிகள் இல்லாததால். பொக்லைன் இயந்திரத்தை வரவழைத்து சாலைகளை சரி செய்த பிறகே கிராமத்திற்குள் ஆம்புலன்ஸ் சென்றுள்ளது.

இதுகுறித்து கிராம மக்கள் கூறுகையில், “இரவு முழுவது இடி மின்னல் விழுந்ததால் மக்களால் ஒன்றும் செய்யமுடியாமல் போனது. இல்லை என்றால் நாங்களே தொட்டில் கட்டி தூக்கிக்கொண்டு சென்றிருப்போம்! முடியாமல் போனதால் அரசுக்கு தகவல் தெரிவித்தோம். அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவர்கள் இருப்பது இல்லை என்றார். நாங்கள் தகவல் கொடுத்த மறுநாள் மதியம் தான் மருத்துவமனைக்கு அழைத்து செல்ல வாகனம் வந்தது. அன்று முழுவதும் பாதிக்கப்பட்டவர்கள் வலியால் துடித்து போனார்கள்.

தரமான சாலை வேண்டும் என்று 40 வருடமாக போராடுகின்றோம்! "7 கிலோ மீட்டர் மட்டுமே இல்லாத சாலைக்கு நாங்கள் மனு கொடுக்காத அலுவலகமே இல்லை" அரசு திட்டம் ஒதுக்குவதாக சொல்கிறார்கள் ஆனால் எதுவும் எங்களுக்கு வரவில்லை. எங்களை ஒரு பொருட்டாக கூட இந்த அரசாங்கம் மதிப்பதில்லை” என்று வேதனையுடன் தெரிவித்தனர்.

பழங்குடியின மக்களின் வளர்ச்சிக்காக பல திட்டங்கள் ஒவ்வொரு ஆண்டும் அரசாங்கம் கொண்டு வருகின்றனர். இந்த திட்டத்திற்கு பல கோடி செலவு செய்து தொண்டு நிறுவனங்கள் மூலமாக மக்களுக்கான திட்டங்கள் நிறைவேற்றுவதாக சொல்லப்படுகிறது. ஆனால் அந்த திட்டத்தின் படி எந்த பயனும் இவர்களுக்கு முறையாக செல்வதில்லை. அதற்கு சான்றாக சின்னாளக் கொம்பை மலை கிராமம் உள்ளது.

இந்த தேசத்தின் பூர்வகுடி மக்களை பாதுகாக்க வேண்டிய அரசு மெத்தனமாக செயல்படுவது ஜனநாயக விரோத செயல் என இந்த செய்தி குறித்து சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.