Tamilnadu

வெட்டப்படும் மரங்களுக்கு பதில், புதிய மரங்கள் ஏன் வளர்ப்பதில்லை?உயர்நீதிமன்றம் கேள்வி

சாலை விரிவாக்க பணிகளை காரணம் காட்டி மரங்கள் அனைத்தும், அகற்றப்பட்டுள்ளது. சாலையோரம் இருந்த மரங்கள் அதிகளவில் வெட்டி அகற்றப்படுவதால் பருவநிலை மாற்றம் ஏற்படுவதாக கூறி உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. அதில் சென்னை - திருச்சி, மதுரை - கன்னியாகுமரி சாலை விரிவாக்கப்பணிகளுக்காக மட்டும் 31 ஆயிரத்து 667 மரங்கள் வெட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சாலை விரிவாக்கத்தின் போது மரங்களை பாதுகாக்க மத்திய போக்குவரத்துறை பசுமை வழிச்சாலை கொள்கையை 2015-ம் ஆண்டு வகுத்தது. அதன்படி சாலை அமைப்பதற்காக மரங்கள் வெட்டும் போது ஒரு மரத்துக்கு பதில் பத்து மரங்களை நட வேண்டும் என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆனால் இந்த உத்தரவு சரியாக பின்பற்றப்படுவதில்லை என மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனை விசாரித்த நீதிமன்றம், சாலை விரிவாக்க பணிகளுக்காக வெட்டப்படும் மரங்களுக்கு பதிலாக புதிய மரங்கள் ஏன் வளர்ப்பதில்லை என கேள்வி எழுப்பியது. மேலும், இதுகுறித்து மத்திய மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை 4 வாரங்களுக்கு நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.