File image
Tamilnadu

குழந்தை விற்பனை பேரம் : 10 விசாரணை குழுக்கள் அமைப்பு!

நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தைச் சேர்ந்த அமுதவள்ளி என்பவர் குழந்தையை விற்பனை செய்வது தொடர்பாக பேசிய ஆடியோ ஒன்று சமீபத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

இதுகுறித்து சுகாதாரத் துறை அதிகாரிகள் அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தனர். அதன்பேரில் செவிலியராகப் பணியாற்றி விருப்பஓய்வு பெற்ற அமுதவள்ளி மற்றும் அவரது கணவரை போலீசார் அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர்.

குழந்தைகளை விற்பனை செய்ததில் அமுதவள்ளிக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தாலும், ஆடியோவில் அவர் 30 ஆண்டுகளாக இந்தத் தொழிலைச் செய்து வருவதாகத் தெரிவித்திருப்பதால் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அமுதவள்ளியிடம் இருந்து 4 குழந்தைகளை வாங்கி மதுரை, திருச்சி மற்றும் நாமக்கல் மாவட்டங்களை சேர்ந்தவர்களுக்கு விற்பனை செய்ததாக செவிலியர் பர்வீன் வாக்குமூலம் அளித்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில், குழந்தை விற்பனை தொடர்பாக விசாரணை நடத்த மருத்துவர், கிராம செவிலியர் உட்பட 3 பேர் அடங்கிய 10 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. நாமக்கல், ராசிபுரம் அரசு மருத்துவமனைகளில் இந்தக் குழுவினர் விசாரணை நடத்துவார்கள் என நாமக்கல் மாவட்ட பொது சுகாதாரத்துறை துணை இயக்குநர் தெரிவித்துள்ளார்.