File image : Social Media
Tamilnadu

ஃபேஸ்புக், வாட்ஸ்-அப் கணக்கு துவங்க ஆதார் கட்டாயம்? - ஆலோசனை நடத்த ஹைகோர்ட் உத்தரவு!

இணையதள குற்றங்கள் அதிகரித்து வருவதால் சைபர் குற்றவாளிகளை அடையாளம் காண, சமூக வலைதள மற்றும் மின்னஞ்சல் கணக்குகளைத் துவங்க ஆதாரை கட்டாயமாக இணைக்கக்கோரி ஆன்டனி கிளமெண்ட் ரூபன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கில் யூ-ட்யூப், ஃபேஸ்புக், வாட்ஸ்-அப், ட்விட்டர் நிறுவனங்களை எதிர்மனுதாரர்களாகச் சேர்த்த நீதிபதிகள், இந்தியாவில் ஏன் இதுவரை குறைதீர்ப்பாளர்களை நியமிக்கவில்லை எனவும் நிறுவனங்களுக்கான அலுவலகங்கள் ஏன் இந்தியாவில் அமைக்கப் படவில்லை எனவும் கேள்வி எழுப்பினர்.

HC Chennai

வாட்ஸ்-அப் நிறுவனம் சார்பில் இன்று ஆஜரான வழக்கறிஞர், வாட்ஸ்-அப் எந்த ஒரு தகவல்களையும், ஆவணங்களையும் சேமித்து வைப்பதில்லை எனவும் விசாரணை அமைப்புகளுக்கு முழு ஒத்துழைப்பு தருவதாகவும் உறுதியளித்தார். இதேபோல் ட்விட்டர், கூகுள் நிறுவனம் சார்பாக ஆஜரான வழக்கறிஞர்களும் உறுதியளித்தனர்.

இதையடுத்து, சமூக வலைதளங்களின் பிரதிநிதிகள் தமிழக தலைமைச் செயலாளருடன் மே 20 முதல் 27-ம் தேதிக்குள் ஆலோசனை நடத்தவேண்டும் எனவும், அது தொடர்பான அறிக்கையைத் தாக்கல் செய்யவேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர். இதையடுத்து வழக்கு விசாரணையை ஜூன் 6-ம் தேதிக்குத் தள்ளிவைத்தனர்.