Tamilnadu

நேற்றிரவு முதல் அமலுக்கு வந்தது மீன்பிடி தடைக்காலம்  

மீன் இனப்பெருக்க காலமாக ஏப்ரல் 15 முதல் ஜூன் 15 வரை 60 நாட்களுக்கு விசைப்படகு மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்ல அரசு தடைவிதித்துள்ளது.அதன்படி இந்தாண்டுக்கான மீன்பிடி தடைகாலம் நேற்றிரவு முதல் அமலுக்கு வறுகிறது. இன்று தொடங்கி - ஜுன் 15-ம் தேதிவரை, 2 மாதங்களுக்கு மீன்பிடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2001ஆம் ஆண்டு முதல் 2016ஆம் ஆண்டு வரை தமிழக அரசு 45 நாட்கள் மட்டுமே இத்தடைக்காலத்தை கடைபிடித்து வந்தது. ஆனால், கடந்த 2017ஆம் ஆண்டு முதல் 60 நாட்கள் மீன்பிடி தடைகாலம் என்ற நடைமுறையை அரசு பின்பற்றி வருகிறது.

தடைகாலம் நள்ளிரவில் அமலுக்கு வந்ததால் திருவள்ளூர் மாவட்ட கடற்பகுதியில் இருந்து கன்னியாகுமரி வரையிலான கிழக்கு கடற்கரை துறைமுகங்களில் உள்ள 13 மீன்பிடி மாவட்டங்களைச் சேர்ந்த சுமார் 5 ஆயிரத்து 600 விசைப்படகுகள் கடலுக்கு செல்லாமல் நங்கூரமிட்டு கரையோரம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

மேலும் மீனவர்கள் மீன்பிடிவலைகள் மற்றும் மீன்பிடி உபகரணங்களை பாதுகாப்பாக வைக்க வீட்டிற்கு கொண்டு செல்ல ஆயத்தமாகி வருகின்றனர். அரசுக்கு ஆண்டு தோறும் பல கோடி அண்னியச் செலவாணியை ஈட்டித்தரும் மீன்பிடி தொழிலாளர்கள், தற்போது தங்களது வாழ்வாதாரத்தை தேடி, மாற்றுத் தொழிலுக்காகவும் மீன்பிடி தொழில் தேடியும் வேற்று மாநிலங்களுக்கு புறப்பட தயாராகி வருகின்றனர்.

மீன்பிடி தடைகாலம் அமலுக்கு வந்தபோதிலும், நாட்டுப்படகு மீனவர்கள் கடலுக்கு செல்ல எவ்வித தடையும் இல்லை. இதனால் அடுத்த 2 மாதங்களுக்கு மீன்களின் விலை அதிகரிக்கும் சூழ்நிலை உருவாகியுள்ளது.

ராமேஸ்வரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய விசைப்படகு மீனவர் சங்கத் தலைவர் எமிரிட், அரசு வழங்கும் மீன்பிடி தடைகால நிவாரண தொகை 5000 ரூபாய் போதுமானதாக இல்லை என குறிப்பிட்டார். வாழ்வாதாரம் இல்லாமல் உள்ள மீனவ குடும்பங்களுக்கு 25, 000 ரூபாய் நிவாரணம் வழங்க வேண்டும் எனவும் அவர் வேண்டுகோள் விடுத்தார்