Sports

மகளிர் டி20 உலகக்கோப்பை தொடக்கம்! : இந்தியா உள்பட 10 அணிகள் பங்கேற்பு!

இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் மகளிர் இருபது ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி கடந்த 2009 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. அதன் தொடர்ச்சியாக, ஒன்பதாவது உலககோப்பை கிரிக்கெட் போட்டி வங்கதேசத்தில் நடைபெற இருந்த நிலையில், அங்கு ஏற்பட்ட அரசியல் சூழல் காரணமாக ஐக்கிய அரபு அமீரகத்திற்கு மாற்றப்பட்டது.

இன்று தொடங்கும் உலகக்கோப்பை போட்டிகள் வரும் 20ஆம் நாள் வரை துபாய் மற்றும் சார்ஜாவில் நடைபெற உள்ளன. இதில் இந்தியா, பாகிஸ்தான், ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா, நியூசிலாந்து என 10 அணிகள் கலந்து கொள்ள உள்ளன. இதில் இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு ஒவ்வொரு அணியும் தங்களது பிரிவில் லீக் சுற்றில் ஒருமுறை மோத வேண்டும்.

லீக் சுற்றுகள் முடிவில் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணி அரை இறுதி போட்டிக்கு முன்னேறும். முதல் அரை இறுதி அக்டோபர் 17ஆம் தேதியும், 2-வது அரை இறுதி 18ஆம் தேதியும், இறுதிப்போட்டி அக்டோபர் 20ஆம் தேதியும் நடைபெற உள்ளது.

இன்று நடைபெறும் ஆட்டங்களில் வங்கதேசம. - ஸ்காட்லாந்து அணிகள் மோதல். மற்றொரு ஆட்டத்தில் பாகிஸ்தான்-இலங்கை அணிகள் மோதுகின்றன. இந்திய அணி தனது முதல் லீக் ஆட்டத்தில் நாளை நியூசிலாந்து அணியை எதிர்கொள்கிறது.

இதுவரை எட்டு 20 ஓவர் உலகக் கோப்பை போட்டிகள் நடந்து முடிந்து உள்ள நிலையில் ஆஸ்திரேலிய அணி அதிகபட்சமாக இரண்டு முறை ஹாட்ரிக் சாம்பியன் பட்டத்துடன் ஆறு முறை கோப்பையைக் கைப்பற்றி உள்ளது. அதற்கு அடுத்தபடியாக இங்கிலாந்து மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகள் தலா ஒரு முறை கோப்பையை கைப்பற்றியுள்ளது.

இந்தியாவைப் பொறுத்தவரை இதுவரை ஒரு முறை கூட கோப்பையை கைப்பற்றாத நிலையில் கடந்த 2020 ஆம் ஆண்டு நடைபெற்ற 20 உலக கோப்பையில் ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான இறுதிப் போட்டியில் தோல்வி அடைந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

ஹர்மன் பிரித் தலைமையில் களம் இறங்கும் இந்திய அணி இந்த முறை கோப்பையை கைப்பற்றுமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் இடையில் எழுந்துள்ளது.

Also Read: இதுதான் காரணம்... நடத்துநரை கத்தியால் குத்திய இளைஞரின் அதிர்ச்சி வாக்குமூலம்... பெங்களூருவில் ஷாக்!