Sports

டெஸ்ட் வரலாற்றில் அதிக தொடர் நாயகர்கள் : அசத்திய அஸ்வின்... முதல் இடத்தில் இரண்டு தமிழர்கள் !

இந்திய அணியின் நட்சத்திர வீரர்களில் ஒருவர் தமிழகத்தை சேர்ந்த ரவிச்சந்திரன் அஸ்வின். டெஸ்ட் போட்டிகளில் அனில் கும்ப்ளேவிற்கு அடுத்து அதிக விக்கெட்டுகளை கைப்பற்றிய இந்திய பந்துவீச்சாளரான திகழ்ந்து வருகிறார்.

இந்திய அணியில் மணிக்கட்டு பந்துவீச்சாளர்களே தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தும் நிலையில், ஆப்-ஸ்பின் பந்துவீச்சாளரான இவர் தற்போது வரை இந்திய அணியில் நீடித்து வருகிறார். டெஸ்ட் போட்டிகளில் இந்தியாவின் முதன்மை சுழற்பந்து வீச்சாளராக அஸ்வின் தொடர்ந்து திகழும் அஸ்வின் 500-க்கும் அதிக விக்கெட்டுகளை வீழத்தியுள்ளார்.

தற்போது நடைபெற்று முடிந்த வங்ததேச அணிக்கு எதிரான தொடரிலும் சிறப்பாக செயல்பட்ட அஸ்வின் சென்னையில் நடைபெற்ற முதல் போட்டியில் இக்கட்டான நிலையில் களமிறங்கி சதம் விளாசி அசத்தினார். அதோடு அந்த போட்டியில் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி ஆட்ட நாயகன் விருதினை வென்றார்.

இரண்டாவது டெஸ்டிலும் சிறப்பாக செயல்பட்ட அவர் 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அஸ்வின் இந்த தொடரில் மட்டும் 114 ரன்களும் 11 விக்கெட்டுகளும் வீழ்த்தியுள்ளார். அதோடு இந்த தொடரில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய பந்துவீச்சாளர்கள் பட்டியலில் பும்ராவுடன் இணைந்து முதல் இடத்தையும் ,அதிக ரன்கள் குவித்த வீரர்கள் பட்டியலில் 6ம் இடத்தையும் பிடித்தார்.

அவரின் இந்த சிறப்பான பங்களிப்பு காரணமாக அவருக்கு இந்த தொடருக்கான தொடர் நாயகன் விருது வழங்கப்பட்டது. இதன் மூலம் டெஸ்ட் வரலாற்றில் அதிக தொடர் நாயகன் விருதினை வென்றவர்கள் பட்டியலில் முத்தையா முரளிதரனின் சாதனையை (11 முறை) அஸ்வின் சமன் செய்துள்ளார். அதுமட்டுமின்றி முரளிதரனை விட 19 தொடர்கள் குறைவாக ஆடி இந்த சாதனையைப் படைத்துள்ளார்.

Also Read: ஜெய்ஸ்வால், பும்ரா அபாரம் : வங்கதேச அணியை வீழ்த்தி தொடரை வென்று இந்திய அணி அசத்தல் !