Sports

45-வது செஸ் ஒலிம்பியாட் : தங்கப்பதக்கத்தை நோக்கி முன்னேறும் இந்திய அணி : மகளிர் அணி முதல் தோல்வி !

ஹங்கேரி தலைநகர் புடாபெஸ்டில் 45வது செஸ் ஒலிம்பியாட் தொடர் நடைபெற்று வருகிறது. ஆடவர், மகளிர் என இரண்டு பிரிவிலும் 7வது சுற்று வரை இந்திய அணி தோல்வியே சந்திக்காமால் தொடர்ந்து வெற்றி நடை போட்டது. இந்த சூழலில் நேற்று நடைபெற்ற 8வது சுற்றில் ஆடவர் அணி ஈரானையும், மகளிர் அணி போலந்தையும் எதிர்கொண்டது.

தங்கப்பதக்க கனவை நோக்கிய இந்த தொடரில் 8வது சுற்றின் வெற்றி மிக முக்கியமானதாக பார்க்கப்பட்டது. ஆடவர் பிரிவில் குகேஷ், அர்ஜூன் எரிகேசி, விதித் குஜ்ராத்தி வெற்றி பெற்றனர். மற்றொரு இந்திய வீரரான பிரக்ஞானந்தா 8வது சுற்றில் டிரா செய்தார். 3.5புள்ளிகளை பெற்ற இந்திய அணி அசத்தல் வெற்றியை பதிவு செய்தது.

8சுற்றுகள் முடிவில் 16புள்ளிகளுடன் முதலிடத்தில் நீடிக்கும் இந்திய ஆடவர் அணி, இன்று தனது 9வதுசுற்றில் நடப்பு சாம்பியன் உஸ்பெகிஸ்தானை எதிர்த்து விளையாடுகிறது. இன்றைய உஸ்பெகிஸ்தானுடனான போட்டி கடினமாக இருப்பதுடன், தங்கப்பதக்கத்திற்கு இந்த போட்டியில் கட்டாயம் வெற்றி பெற வேண்டிய சூழலில் இந்திய அணி உள்ளது.

மகளிர் பிரிவை பொறுத்தவரை இந்திய அணி 8வது சுற்றில் போலந்து அணியுடன் விளையாடியது. இந்தியாவின் ஹரிகா துரோணோவள்ளி, வைஷாலி தங்களது போட்டிகளில் தோல்வியை தழுவினர். மற்றொரு இந்திய வீராங்கனை வந்திகா அகர்வால் முக்கியமான நகர்த்தலில் தனது போட்டியை டிரா செய்தனர்.

அதே போல, இந்திய அணியின் திவ்யா தேஷ்முக் வெற்றி பெற்று ஆறுதல் அளித்தார். இதனால், இந்த சுற்றில் 1.5 புள்ளிகளை மட்டும் பெற்ற இந்திய அணியின் தொடர் வெற்றிக்கு முற்றுப்புள்ளி வைத்தது போலந்து. தோல்வியடைந்தாலும் பட்டியலில் இந்திய மகளிர் அணி முதலிடத்தில் உள்ளது.

இன்றைய 9வது சுற்றில் இந்திய மகளிர் அணி அமெரிக்காவை எதிர்த்து விளையாடுகிறது.தோல்வியில் இருந்து மீண்டு எழும் முனைப்பில் களம் காணவுள்ளது. ஆடவர் பிரிவில் இந்திய அணி நடப்பு சாம்பியன் உஸ்பெகிஸ்தானை வீழ்த்தினால், தங்கப்பதக்கத்தை நெருங்குவதற்கான வாய்ப்பு அதிகரிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read: சுதந்திரத்துக்கு முன்னரே மையப்படுத்தப்பட்ட அதிகாரத்தை எதிர்த்த தமிழ்நாடு : முரசொலி தலையங்கம் !