Sports

”அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ரூ.7 லட்சம் கொடுத்து உதவினார்” - பாராலிம்பிக் நாயகன் மாரியப்பன் நெகிழ்ச்சி !

சமீபத்தில் நடந்து முடிந்த பாரிஸ் பாரா ஒலிம்பிக் தொடரின் உயரம் தாண்டுதல் போட்டியில் தமிழ்நாட்டு வீரர் மாரியப்பன் தங்கவேலு வெண்கலப் பதக்கம் வென்று அசத்தினார். இதன் மூலம் தொடர்ந்து மூன்று பாராலிம்பிக் போட்டிகளில் பதக்கம் வென்ற இந்தியர் என்ற அரிய சாதனையை படைத்தார்.

மாரியப்பன் தங்கவேலு 2016ம் ஆண்டு ரியோ பாராலிம்பிக்கில் தங்கம் வென்று, தடகள போட்டிகளில் தங்கம் வென்ற முதல் இந்தியர் என்ற சாதனையைப் படைத்தார். அதனைத் தொடர்ந்து 2020ம் ஆண்டு டோக்கிய பாராலிம்பிக்கிலும் வெள்ளி வென்று அசத்தினார்.

இதனைத் தொடர்ந்து அவருக்கு பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் மாரியப்பன் தங்கவேலுவுக்கு தனது வாழ்த்துக்களைத் தெரிவித்திருந்தார். பாரிஸ் பாராலிம்பிக் போட்டிகள் முடிந்து மாரியப்பன் தங்கவேலு நேற்று சென்னை திரும்பினார். அவருக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

பின்னர் சென்னை விமானநிலையத்தில் செய்தியாளர்களை அவர் சந்தித்தார். அப்போது பேசிய அவர்,பாரிஸ் பாராலிம்பிக் தங்கம் வெல்ல வேண்டும் என்ற கனவுடன்தான் சென்றேன். ஆனால், அந்த காலநிலை எனது உடலுக்கு ஒத்துழைக்காததால் காய்ச்சலால் பாதிக்கப்பட்டேன். எனினும் வெண்கலம் வென்றதில் மகிழ்ச்சியடைகிறேன். அடுத்த முறை நிச்சயம் தங்கம் வெல்வேன் என்று நம்புகிறேன்.

2016ஆம் ஆண்டு நான் பாராலிம்பிக்கில் பதக்கம் வெல்லும் முன்னர் பாரா விளையாட்டுகள் பற்றி பலருக்கு தெரியாது. ஆனால் தற்போது பாரா விளையாட்டுகள் மக்களில் பிரபலாமாகியுள்ளது. பாராலிம்பிக் செல்வதற்கு முன்பு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் எங்களுக்கு ரூ.7 லட்சம் கொடுத்து உதவினார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் என்னை ஊக்கப்படுத்தினர். தற்போது தமிழ்நாட்டிலிருந்து நான்குபேர் பதக்கங்கள் வென்றுள்ளோம். விரைவில் இந்தியா ஒலிம்பிக்கில் முதலிடம் வகிக்க வேண்டும்” என்று தெரிவித்தார்.

Also Read: பாகிஸ்தானை வீழ்த்தினால் இந்தியாவை வீழ்த்த முடியுமா ? - வங்கதேச அணிக்கு தினேஷ் கார்த்திக் எச்சரிக்கை !