Sports

கோலாகலமாக தொடங்கிய Chess Olympiad 2024 : இந்திய அணியில் 3 முக்கிய தமிழக வீரர்கள் - யார், யார்?

ஒலிம்பிக் போட்டிகளில் செஸ் விளையாட்டு இல்லாத குறையை செஸ் ஒலிம்பியாட் போட்டித் திருவிழா போக்கி வருகிறது. கடந்த 2022-ம் ஆண்டின் 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டித் தொடர் தமிழ்நாட்டில் நடைபெற்றது. முதல் முறை இந்தியாவில் நடைபெற்ற இந்த போட்டித்தொடரை திமுக தலைமையிலான தமிழ்நாடு அரசு மிகவும் பிரம்மாண்டமாக நடத்தியது.

இந்த சூழலில் 45-வது செஸ் ஒலிம்பியாட் போட்டித்தொடர் தற்போது ஹங்கேரி நாட்டில் நடைபெற்று வருகிறது. ஹங்கேரி தலைநகர் புடாபெஸ்டில் 45-வது செஸ் ஒலிம்பியாட் தொடரின் தொடக்கவிழா நேற்று (10.09.2024) கோலாகலமாக நடைபெற்ற நிலையில், போட்டியானது இன்று (11.09.2024) தொடங்கியுள்ளது. இந்த போட்டித்தொடர் இன்று தொடங்கி, வரும் 22-ம் தேதி வரை 11 சுற்றுகளாக நடைபெறுகிறது.

இதில் தமிழ்நாட்டில் இருந்து குகேஷ், பிரக்ஞானந்தா, வைஷாலி ஆகியோர் பங்கேற்கின்றனர். ஓபன் (ஆடவர்) பிரிவில் 197 அணிகள், மகளிர் பிரிவில் 183 அணிகள் பங்கேற்றுள்ளன. ஒவ்வொரு அணியிலும் ஒரு மாற்று வீரர் உள்பட 5 வீரர்கள் இடம் பிடித்திருப்பர். ஒவ்வொரு சுற்றிலும் வெற்றி பெறும் வீரருக்கு ஒரு புள்ளியும், டிரா செய்பவர்களுக்கு அரை புள்ளியும் வழங்கப்படும்.

வைஷாலி, பிரக்ஞானந்தா, குகேஷ்

இந்தியாவில் இருந்து கடந்த செஸ் ஒலிம்பொயாட் தொடரில் களமிறங்கிய அதே அணி தற்போதும் களமிறங்கியுள்ளது. ஓபன் (ஆடவர்) பிரிவில் அர்ஜூன் எரிகேசி, குகேஷ், பிரக்ஞானந்தா, விதித் சந்தோஷ், ஹரிகிருஷ்ணா ஆகியோர் இடம் பிடித்துள்ளனர்.

அதேபோல், மகளிர் பிரிவில் தமிழ்நாட்டை சேர்ந்த வைஷாலி, ஹரிகா துரோணோவள்ளி, வந்திகா அகர்வால், தானியா சச்தேவ், திவ்யா தேஷ்முக் ஆகியோர் உள்ளனர். சுவிஸ் முறையில் நடைபெறும் இந்த தொடரில் ஒவ்வொரு சுற்றுக்கும் மொத்தம் 90 நிமிடங்கள் வழங்கப்படும். முதல் 40 நகர்த்தல்களுக்குள் போட்டி முடியவில்லை என்றால் கூடுதலாக 30 நிமிடங்கள் வழங்கப்படும்.

சென்னையில் நடைபெற்ற 2022 செஸ் ஒலிம்பியாட் தொடரில் ஓபன் பிரிவில் உஸ்பெகிஸ்தான் தங்கமும், அர்மேனியா வெள்ளியும், இந்திய அணி வெண்கலமும் வென்றிருந்தது. அதேபோல், மகளிர் பிரிவில் உக்ரைன் தங்கமும், ஜியார்ஜியா வெள்ளியும், இந்தியா வெண்கலமும் வென்றிருந்தது. இந்த முறை தங்கப்பதக்கம் வெல்லும் முனைப்புடன் இந்திய அணி களமிறங்குகிறது குறிப்பிடத்தக்கது.

Also Read: “தொழிற்சாலை தொடங்க உகந்த மாநிலம் தமிழ்நாடு!” : CEAT துணைத் தலைவர் ஜெய்சங்கர் குருப்பல் பேட்டி!