Sports

"நான் கடந்து வந்தது எல்லாம் முள்பாதைதான்"- கடந்த கால வலிகளை தாண்டி உயர்ந்தது குறித்து பேசிய நடராஜன் !

தமிழ்நாடு வீரர் நடராஜன் TNPL தொடரில் தான் வீசிய சிறப்பான யார்க்கர்களால் ஐபில் தொடரில் கால் பதித்தார். சன்ரைசர்ஸ் அணியில் அவர் வீசிய ஒவ்வொரு யார்க்கருமே பேசுபொருளாகியிருந்தது. அந்த ஐ.பி.எல் சீசன் முடிந்த உடனேயே ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்திற்கான இந்திய அணியில் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

அந்த ஒரே சுற்றுப்பயணத்தில் மூன்று ஃபார்மட்களிலுமே இந்திய அணிக்கு அறிமுகமாகி சிறப்பாகவும் செயல்பட்டிருந்தார். இதனைத் தொடர்ந்து 2021-ம் ஆண்டு டி20 உலகக்கோப்பையில் இந்திய அணியின் துருப்புச்சீட்டாக இருப்பார் எனவும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில் திடீரென காயமடைந்தார்.

பின்னர் கடந்த ஐபில் தொடரிலும் சிறப்பாகவே செயல்பட்டார். எனினும் அடுத்தடுத்து அவர் காயம் அடைந்தது அவருக்கு பெரும் பின்னடைவாக அமைந்ததால் ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற உலகக்கோப்பையில் இந்திய அணியில் அவருக்கு இடம் கிடைக்கவில்லை.

எனினும் தற்போது காயத்திலிருந்து மீண்டுள்ள அவர் நடப்பு ஐபிஎல் தொடரில் மீண்டும் சிறப்பாக செயல்பட்டார். இதனால் அவருக்கு இந்திய அணியில் மீண்டும் வாய்ப்பு வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே சேலத்தில் தனியார்ப் பள்ளியின் நிகழ்ச்சி ஒன்றில் நடராஜன் கலந்துகொண்டார்.

அந்த நிகழ்ச்சியில் பேசிய அவர், "நான் தமிழ்நாடு அணிக்காக அறிமுகமான பின்னர், எந்த பவுலிங் ஆக்‌ஷன் சரியில்லை என்று சொல்லி எனக்கு தடை விதிக்கப்பட்டது. தஎன் வாழ்க்கை தொடங்கியதும் முடிவுக்கு வந்திவிட்டதாக எனக்கு தோன்றியது. எனினும் தொடர்ந்து முயற்சி செய்து அதிலிருந்து மீண்டு வந்தேன்.

கடந்த காலங்களில் எனக்கு பயிற்சி எடுக்கவே இடம் இருக்காது. நான் கடந்து வந்தது எல்லாம் முள்பாதைதான். வெறும் காலில் மூன்று, நான்கு வருடங்கள் ஓடி, என்னிடம் என்ன உள்ளதோ அதற்கு ஏற்றாற்போல என்னை மாற்றுக்கொண்டுதான் நான் இந்த இடத்துக்கு வந்துள்ளேன். கடுமையான உழைப்பு இருந்தால் விளையாட்டாக இருந்தாலும் சரி படிப்பாக இருந்தாலும் சரி நல்ல இடத்துக்கு வரமுடியும்"என்று தெரிவித்தார்.

Also Read: பாரிஸ் பாராலிம்பிக் : 3 பதக்கங்களை வென்ற தமிழ்நாட்டு வீராங்கனைகள்... விவரம் என்ன ?