Sports

களைகட்டும் பாராலிம்பிக்ஸ் போட்டி : 7 பதக்கங்களை வென்ற இந்தியா... பதக்கப்பட்டியலில் இந்தியாவின் இடம் என்ன?

பாரிஸ் ஒலிம்பிக் போட்டிகள் நிறைவடைந்ததைத் தொடர்ந்து மாற்றுத்திறனாளிகளுக்கான 17வது பாரா ஒலிம்பிக் போட்டி பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடைபெற்று வருகிறது. இதில் உலகம் முழுவதிலும் இருந்து 4,400 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.

இந்தியா சார்பில் 84 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். இந்த தொடரில் மகளிருக்கான துப்பாக்கிச் சுடுதல் 10 மீ ஏர் ரைபிள் பிரிவில் அவானி லெகாரா தங்கப் பதக்கம் வென்று அசத்தினார். இதே பிரிவில் இந்தியாவின் மோனா அகர்வாலும் வெண்கலம் வென்றிருந்தார்.

பின்னர் 100 மீ ஓட்டப்பந்தயத்தில் இந்தியாவின் பிரீத்தி பால் 14.21 நொடிகளில் பந்தய தூரத்தை எட்டி வெண்கலப் பதக்கத்தை வென்ற நிலையில், 200 மீட்டர் ஓட்டப் பந்தயத்திலும் வெண்கலப்பதக்கத்தை வென்று இந்த பாரா ஒலிம்பிக்கீழ் இரு பதக்கங்களை வென்றுள்ளார்.

avani lekhara

அதே போல துப்பாக்கிச் சுடுதல் 10 மீ ஏர் பிஸ்டல் பிரிவில் இந்தியாவின் இளம் வீரரான மணிஷ் நார்வால் 234.9 புள்ளிகள் பெற்று வெள்ளி பதக்கம் வென்றுள்ளார். அதே பிரிவில் துப்பாக்கிச் சுடுதல் 10 மீ ஏர் பிஸ்டல் பிரிவில் இந்தியாவின் ரூபினா பிரான்ஸ்சிஸ் வெண்கலம் வென்றுள்ளார். உயரம் தாண்டுதல் பிரிவில் இந்திய வீரர் நிஷாத் குமார் வெள்ளிப்பதக்கம் வென்று அசத்தினார்.

இதனிடையே பாரா ஒலிம்பிக் தொடரின் பேட்மிண்டன் அரையிறுதிப் போட்டியில் வென்று இறுதிப்போட்டிக்கு சென்றதின் மூலம் தமிழ்நாடு வீராங்கனை துளசிமதி இந்தியாவுக்கு மேலும் ஒரு பதக்கத்தை உறுதி செய்துள்ளார். தற்போது வரை இந்தியா ஒரு தங்கம், இரண்டு வெள்ளி, 4 வெண்கலம் என 7 பதக்கங்களை வென்று பதக்கப்பட்டியலில் 27-வது இடத்தில் உள்ளது.

Also Read: சுங்கச்சாவடிகளின் கட்டண உயர்வு : ஆம்னி பேருந்து கட்டணத்தை உயர்த்துவதாக பேருந்து உரிமையார்கள் அறிவிப்பு !