Sports

வினேஷ் போகத்துக்கு கோடிக்கணக்கில் கொட்டிய நிதியுதவி : வதந்திகளுக்கு வினேஷ் போகத்தின் கணவர் மறுப்பு !

பாரிஸ் ஒலிம்பிக் தொடரின் மல்யுத்த மல்யுத்த போட்டியில் 50 கிலோ எடை பிடியில் இந்திய வீரர் வினேஷ் போகத் காலிறுதிக்கு முந்தைய போட்டியில் உலகின் நம்பர் 1 வீராங்கனையும், 4 முறை உலக சாம்பியன், நடப்பு ஒலிம்பிக் சாம்பியனுமான ஜப்பானின் யூ சுசாகியை வீழ்த்தினார்.

அதனைத் தொடர்ந்து நடைபெற்ற காலிறுதிப்போட்டியில் உலகின் 7-ம் நம்பர் வீராங்கனையான உக்ரைனின் ஒல்ஸானா லிவாச்சை வீழ்த்தி வினேஷ் போகத் அரையிறுதிக்கு முன்னேறினார்.பின்னர் நடைபெற்ற அரையிறுதிப் போட்டியில் கியூபாவின் கஸ்மான் லோபசை 5-0 என்ற புள்ளிக்கணக்கில் வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறினார். இதன் மூலம் மல்யுத்தத்தில் இறுதிபோட்டிக்கு தகுதி பெற்ற முதல் இந்திய வீராங்கனை என்ற பெருமையை வினேஷ் போகத் பெற்றார்.

இறுதிப்போட்டிக்கு முன்னேறிய நிலையில் அவர் தங்கம் அல்லது வெள்ளி வெல்வது உறுதியான நிலையில், 50 கிலோ எடையை விட 100 கிராம் அதிக எடை இருந்ததாக கூறப்பட்டு வினேஷ் போகத் தகுதி நீக்கம் செய்யப்பட்டது. தொடர்ந்து இந்த விவகாரம் தொடர்பாக சர்வதேச விளையாட்டு தீர்ப்பாயத்தில் மேல்முறையீடு செய்யப்பட்ட நிலையில், வினேஷ் போகத்தின் மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

எனினும் இந்தியா திரும்பிய அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அவருக்கு ஹரியானா அரசு சார்பில் வெள்ளிப்பதக்கம் வென்றதற்கான மரியாதை மற்றும் பரிசுத்தொகை அளிக்கப்படும் என ஹரியானா அரசு அறிவித்தது.

இதனிடையே வினேஷ் போகத்துக்கு பரிசு மற்றும் நிதியுதவியாக மட்டும் மொத்தம் 16 கோடியே 30 லட்ச ரூபாய் அளவில் பரிசுத் தொகை கிடைத்துள்ளதாக ஒரு செய்தி ஒன்று இணையத்தில் வைரலானது. இந்த நிலையில், இந்த தகவலுக்கு வினேஷ் போகத்தின் கணவர் சோம்வீர ரதி மறுப்பு தெரிவித்துள்ளார்.

இது குறித்து பேசிய அவர், "வினேஷ் போகத் யாரிடமிருந்தும் பணம் பெறவில்லை. தற்போது வரை எந்த அமைப்பும் அவருக்குப் பண உதவியோ, பரிசுத் தொகையோ வழங்கவில்லை. தொழிலதிபர்கள், நிறுவனங்கள் உள்ளிட்ட யாரும் வினேஷ் போகத்துக்கு நிதி உதவி செய்ததாக வரும் தகவல் தவறானது.

இது தொடர்பாக தவறான தகவல்கள் யாரும் நம்ப வேண்டாம். அதனை பரப்பவும் செய்யவேண்டாம். இதை போன்ற போலி தகவல்களால் நமக்கு மட்டும் பாதிப்பு ஏற்படாது, ஒட்டுமொத்த சமூக மதிப்புகளும் பாதிக்கப்படும். எனவே வதந்தியை நம்பவேண்டாம்"என்று அவர் கூறியுள்ளார்.

Also Read: "நடராஜர் கோயிலில் பக்தர்கள் கனகசபை மீது தரிசனம் செய்வதை தடுக்க கூடாது"- சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு !