Sports

செப்டம்பரில் கோலாகலமாக தொடங்கும் 'முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகள் - 2024' - முழு விவரம் !

சென்னையில் கடந்த ஆண்டு நடைபெற்ற 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டியின் நிறைவு விழாவில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், 'முதலமைச்சர் கோப்பை' என்ற விளையாட்டுப் போட்டியினை அறிவித்தார். அதில் கபடி, சிலம்பம் உட்பட 15 விளையாட்டுகள் பள்ளி, கல்லூரி, அரசு ஊழியர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு நடத்தப்படும் என அறிவித்திருந்தார்

அதன்படி அனைத்து மாவட்டங்களிலும் மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகள் கடந்த ஆண்டு வெற்றிகரமாக நடைபெற்று சென்னை, செங்கல்பட்டு, கோயம்புத்தூர் ஆகிய மாவட்டங்கள் கடந்த ஆண்டு முதல் 3 இடத்தை பிடித்தது. இந்த சூழலில் இந்த ஆண்டுக்கான 'முதலமைச்சர் கோப்பை' போட்டி அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன் விவரம் வருமாறு :

தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் அறிவிப்பின்படி, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் அவர்கள் வழிகாட்டுதலின்படி தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பை" விளையாட்டுப் போட்டிகள் சிறப்பாக நடத்தப்பட்டு வருகிறது.

இவ்வாண்டிற்கான இணையதள முன்பதிவு (online registration) 04.08.2024 முதல் https://sdat.tn.gov.in என்ற இணையதளம் வாயிலாக முன்பதிவு செய்யப்பட்டு வருகிறது. முன்பதிவு செய்திட கடைசி நாள் 25.08.2024. மாவட்ட மற்றும் மண்டல அளவிலான விளையாட்டுப் போட்டிகள் செப்டம்பர் 10 முதல் துவங்கப்படவுள்ளதால் பள்ளி, கல்லூரி மாணாக்கர்கள், மாற்றுத்திறனாளிகள், பொதுப் பிரிவு மற்றும் அரசு ஊழியர்கள் அடங்கிய அனைத்து பிரிவினரும் உடனடியாக இணையதளத்தில் முன்பதிவினை விரைந்து செய்து விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்றிடுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

மாணாக்கர்கள் தாங்களாகவோ, தங்கள் பள்ளி, கல்லூரி மூலமாகவோ முன்பதிவு செய்து கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் மாவட்ட விளையாட்டு அலுவலகங்களை தொடர்பு கொள்ளலாம். “ஆடுகளம்” தகவல் தொடர்பு மையத்தை அனைத்து வேலை நாட்களிலும் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை 9514 000 777 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

முதலமைச்சர் கோப்பை குறித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவு :

'முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகள் - 2024' வரும் செப்டம்பரில் தமிழ்நாடெங்கும் கோலாகலமாக தொடங்கவுள்ளது. சென்றாண்டு 15 வகையான விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்ற நிலையில், இந்தாண்டு 25 வகையான விளையாட்டுப் போட்டிகளை, 5 பிரிவுகளின் கீழ் நடத்துகிறோம்.

இப்போட்டிகளில் பங்கேற்க, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் https://sdat.tn.gov.in இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என்று, இணையவழிப் பதிவினை கடந்த 4-ஆம் தேதி தொடங்கி வைத்திருந்தோம். வரும் ஆகஸ்ட் 25-ஆம் தேதியோடு இந்த இணையவழி விண்ணப்பப் பதிவுகள் நிறைவுப் பெறுகின்றன.

எனவே, முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்க விரும்பும் பள்ளி - கல்லூரி மாணவர்கள், பொதுமக்கள், அரசு ஊழியர்கள், மாற்றுத்திறனாளிகள் அனைவரும் விரைந்து விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்கிறோம். நம் திராவிட மாடல் அரசு நடத்துகிற முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகளில் அனைவரும் பங்கேற்பீர். விளையாட்டினை மாபெரும் மக்கள் இயக்கமாக்கிடுவீர்.

Also Read: “OBC, SC, ST மக்களின் வாய்ப்புகளை தட்டிப் பறிக்கிறது Lateral Entry” - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம்!