Sports

துலீப் டிராஃபி தொடரில் நடராஜனுக்கு இடம் கிடைக்காததற்கு காரணம் இதுதான் - அஸ்வின் கூறியது என்ன ?

தமிழ்நாடு வீரர் நடராஜன் TNPL தொடரில் தான் வீசிய சிறப்பான யார்க்கர்களால் ஐபில் தொடரில் கால் பதித்தார். சன்ரைசர்ஸ் அணியில் அவர் வீசிய ஒவ்வொரு யார்க்கருமே பேசுபொருளாகியிருந்தது. அந்த ஐ.பி.எல் சீசன் முடிந்த உடனேயே ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்திற்கான இந்திய அணியில் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

அந்த ஒரே சுற்றுப்பயணத்தில் மூன்று ஃபார்மட்களிலுமே இந்திய அணிக்கு அறிமுகமாகி சிறப்பாகவும் செயல்பட்டிருந்தார். இதனைத் தொடர்ந்து 2021-ம் ஆண்டு டி20 உலகக்கோப்பையில் இந்திய அணியின் துருப்புச்சீட்டாக இருப்பார் எனவும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில் திடீரென காயமடைந்தார்.

பின்னர் கடந்த ஐபில் தொடரிலும் சிறப்பாகவே செயல்பட்டார். எனினும் அடுத்தடுத்து அவர் காயம் அடைந்தது அவருக்கு பெரும் பின்னடைவாக அமைந்தது. அதன் பின்னர் காயத்தில் இருந்து மீண்டு சிறப்பாக செயல்படும் அதன்பின்னர் இந்திய அணியில் அவருக்கு இடம் கிடைக்கவில்லை.

அதோடு தற்போது உள்ளூர் தொடரான துலீப் டிராஃபி தொடரிலும் நடராஜனுக்கு இடம் வழங்கப்படவில்லை. இது சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், துலீப் டிராஃபி தொடரில் நடராஜனுக்கு இடம் வழங்கப்படாததன் காரணத்தை இந்திய அணி வீரர் அஸ்வின் கூறியுள்ளார்.

இது குறித்துப் பேசிய அவர், " துலீப் டிராபி தொடர் என்பது இந்திய வீரர்கள் அனைவரையும் டெஸ்ட் தொடருக்கு தயார்ப்படுத்தும் ஒரு தொடர்தான். கடந்த 3 ஆண்டாக அவர் ரஞ்சிக் கோப்பையில் விளையாடவில்லை. கடந்த ஆண்டு ரஞ்சிக் கோப்பை அணியில் இடம் பெற்றும் லெவன் அணியில் அவருக்கு விளையாட வாய்ப்பு கிடைக்கவில்லை. இந்த சூழலில் அவருக்கு துலீப் டிராபி தொடரில் இடம் கிடைக்கவில்லை.

அதே நேரம் டராஜன் வெள்ளைப் பந்தில் ஒரு சிறப்பான பவுலர். நடைபெற்று முடிந்த ஐபிஎல் தொடரிலும் சிறப்பாக செயல்பட்டார். நடராஜனுக்கு எப்போதுமே எனது ஆதரவு உண்டு. அவர் மிகவும் சிறந்த வீரர், ஒருவேளை ரஞ்சி கோப்பை தொடரில் நடராஜன் தமிழ்நாடு அணிக்காகத் தொடர்ந்து விளையாடி இருந்தால், நானே அவருக்காகக் குரல் கொடுத்திருப்பேன்” என்று கூறியுள்ளார்.

Also Read: மகளிர் டி20 உலகக் கோப்பை : வங்கதேசத்தில் தொடரை நடத்த ஆஸ்திரேலிய கேப்டன் எதிர்ப்பு !