Sports

"வினேஷ் போகத் இறந்துவிடுவாரோ என்று பயந்தேன்" - எடை குறைக்கும் தீவிர பயிற்சியை விவரித்த பயிற்சியாளர் !

பாரிஸ் ஒலிம்பிக் தொடரின் மல்யுத்த மல்யுத்த போட்டியில் 50 கிலோ எடை பிடியில் இந்திய வீரர் வினேஷ் போகத் காலிறுதிக்கு முந்தைய போட்டியில் உலகின் நம்பர் 1 வீராங்கனையும், 4 முறை உலக சாம்பியன், நடப்பு ஒலிம்பிக் சாம்பியனுமான ஜப்பானின் யூ சுசாகியை வீழ்த்தினார்.

அதனைத் தொடர்ந்து நடைபெற்ற காலிறுதிப்போட்டியில் உலகின் 7-ம் நம்பர் வீராங்கனையான உக்ரைனின் ஒல்ஸானா லிவாச்சை வீழ்த்தி வினேஷ் போகத் அரையிறுதிக்கு முன்னேறினார்.பின்னர் நடைபெற்ற அரையிறுதிப் போட்டியில் கியூபாவின் கஸ்மான் லோபசை 5-0 என்ற புள்ளிக்கணக்கில் வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறினார். இதன் மூலம் மல்யுத்தத்தில் இறுதிபோட்டிக்கு தகுதி பெற்ற முதல் இந்திய வீராங்கனை என்ற பெருமையை வினேஷ் போகத் பெற்றார்.

இறுதிப்போட்டிக்கு முன்னேறிய நிலையில் அவர் தங்கம் அல்லது வெள்ளி வெல்வது உறுதியான நிலையில், 50 கிலோ எடையை விட 100 கிராம் அதிக எடை இருந்ததாக கூறப்பட்டு வினேஷ் போகத் தகுதி நீக்கம் செய்யப்பட்டது. தொடர்ந்து இந்த விவகாரம் தொடர்பாக சர்வதேச விளையாட்டு தீர்ப்பாயத்தில் மேல்முறையீடு செய்யப்பட்ட நிலையில், வினேஷ் போகத்தின் மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

இதனிடையே எடையை குறைக்க வினேஷ் போகத் செய்த பயிற்சி காரணமாக அவர் இறந்துவிடுவாரோ எனப் பயந்தேன் என அவரின் பயிற்சியாளர் வோலர் அகோஸ் கூறியுள்ளார். இது குறித்து வினேஷ் போகத்தின் பயிற்சியாளர் வோலர் அகோஸ் பதிவிட்டிருந்த சமூகவலைத்தள பதிவில், "அரையிறுதிப் போட்டி முடிவடைந்ததும் வினேஷ் போகத்தின் உடல் எடை 2.7 கிலோ அதிகரித்திருந்தது. இதனால் எடையை குறைக்க அவர் கடுமையான உடற்பயிற்சியில் ஈடுபட்டார்.

நள்ளிரவு முதல் அதிகாலை 5.30 மணி வரை வினேஷ் போகத் டிரெட்மில், சைக்கிளிங் மற்றும் மல்யுத்த நகர்வுகளை மேற்கொண்டார். பின்னர் 2 முதல் 3 நிமிடங்கள் ஓய்வுக்கு பின்னர் மீண்டும் பயிற்சியை தொடர்ந்தார். சுமார் 50 நிமிடங்கள் நீராவி குளியல் எடுத்துக் கொண்டார். பின்னர் மீண்டும் பயிற்சியை மேற்கொண்டபோது அவர் சரிந்து விழுந்தார். ஆனால் எப்படியோ நாங்கள் அவளை எழுப்பினோம். இந்த பயிற்சியால் அவர் இறந்துவிடுவாரோ எனப் பயந்தேன். ஆனால், நான் எனது இலக்கை அடைந்துவிட்டேன். உலகின் சிறந்த வீராங்கனைகளில் நானும் ஒருவர் என்பதை நிரூபித்துள்ளேன் என்று அவர் என்னிடம் கூறினார்"என்று அந்த பதிவில் தெரிவித்துள்ளார்.

Also Read: ”குஷ்புவை முதலில் எனது பதிவை பார்க்க சொல்லுங்கள்” : கனிமொழி MP பதிலடி!