Sports

"எங்கள் நாட்டு லீக் அணியை வாங்குங்கள்"- IPL அணி உரிமையாளர்களிடம் இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் கோரிக்கை!

உலக அளவில் பிரபலமான கிரிக்கெட் தொடர் என்றால் அது இந்தியாவில் நடக்கும் ஐபிஎல் தொடர்தான். ஐபிஎல் தொடர் ஆரம்பிக்கும் வரை சாதாரண கிரிக்கெட் அமைப்பாக இருந்த பிசிசிஐ இதன்பின்னர் பெரும் வலிமை வாய்ந்த பணக்கார கிரிக்கெட் அமைப்பாக மாறியது.

ஐபிஎல் தொடரின் வெற்றியைத் தொடர்ந்து, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், இலங்கை,வங்கதேசம் போன்ற பல்வேறு நாடுகளில் ஐபிஎல் பாணியில் கிரிக்கெட் தொடர்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. அங்கும் அவை வணிக ரீதியாக வெற்றியை பெற்றுவருகின்றன.

அதைத் தொடர்ந்து தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் நிர்வாகமும், ஐபிஎல் பாணியிலான தொடரை ஆரம்பித்தது. 6 அணிகள் கொண்ட இந்த தொடரிலும் ஐபிஎல் அணிகள் களமிறங்கி 6 அணிகளையும் வாங்கின. இதனைத் தொடர்ந்து அமெரிக்காவிலும் ஐபிஎல் அணிகள் களமிறங்கியுள்ளன. அங்கு நடைபெறவுள்ள மேஜர் லீக் கிரிக்கெட் டி20" என்ற டி20 லீக் போட்டியின் 6 அணிகளையும் ஐபிஎல் அணிகளே வாங்கின.

அந்த அணிகளை ஐபிஎல் அணிகள் வாங்கியதால் அந்த தொடருக்கு அதிக வரவேற்பு கிடைத்து வருகிறது. இதனால் அந்தந்த நாட்டு வாரியங்கள் பொருளாதார அளவில் நல்ல நிலைமைக்கு வந்துகொண்டிருக்கிறது. இந்த நிலையில், இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் தொடங்கவுள்ள 100 லீக் தொடரில் ஐபிஎல் அணிகள் முதலீடு செய்ய இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

இது குறித்து வெளியான செய்திகளின் அடிப்படையில், ஐபிஎல் உரிமையாளர்கள் 8 அணிகளிலும் சிறிய பங்குகளை வாங்க வேண்டும் என்று இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டதாகவும், ஐபிஎல் அணி உரிமையாளர்களும் இதற்கு ஆர்வம் காட்டியுள்ளதாகவும் இங்கிலாந்து கிரிக்கெட் வாரிய அதிகாரிகள் கூறியுள்ளனர்.

அதே போல ஐபிஎல் அணி உரிமையாளர்கள் சார்பில், முதலீடு செய்யும் பணத்திற்கு, சில அதிகாரங்களை எதிர்பார்ப்பதாகவும், அணிகளின் பெயர்களை மாற்ற ஐபிஎல் அணி உரிமையாளர்கள் கோரிக்கை வைத்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இது குறித்த முடிவு விரைவில் எடுக்கப்படும் என்றும் செய்திகள் வெளியாகியுள்ளது.

Also Read: "வினேஷ் போகத் இறந்துவிடுவாரோ என்று பயந்தேன்" - எடை குறைக்கும் தீவிர பயிற்சியை விவரித்த பயிற்சியாளர் !