Sports

வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா மீது கொலை வழக்குப் பதிவு : நாடு திரும்புவதில் சிக்கல் !

வங்கதேச நாட்டின் பிரதமராக அவாமி லீக் கட்சியை சேர்ந்த ஷைக் ஹசினா 2009 -ம் ஆண்டு இரண்டாம் முறையாக ஆட்சி பொறுப்பேற்றார். அதன்பின்னர் தோல்வியே தழுவாமல் தொடர்ந்து 5 முறை நாடாளுமன்ற தேர்தலில் வெற்றிபெற்று பிரதமராக இருந்து வந்தார்.

ஆனால், வங்கதேசத்தில் சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்டு சுதந்திர போராட்ட வீரர்களின் வாரிசுகளுக்கு இடஒதுக்கீடு வழங்கப்பட்டதை கண்டித்து வங்கதேசத்தில் நடந்த போராட்டத்தில் 300 க்கும் அதிகமானோர் உயிரிழந்தனர். அந்த போராட்டம் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு காரணமாக சற்று தணிந்த நிலையில், சில நாட்களுக்கு முன்னர் மீண்டும் போராட்டம் வெடித்தது.

இந்த போராட்டத்தில் தீவிரமடைந்ததை உணர்ந்த வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா இந்தியாவுக்கு தப்பிச்சென்றார். அதனைத் தொடர்ந்து வங்கதேசத்தில் இடைக்கால அரசு தற்போது பொறுப்பேற்றுள்ளது. இந்த நிலையில், ஷேக் ஹசீனா மீது வங்கதேசத்தில் கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

வங்கதேசத்தில் நடந்த உள்நாட்டு கலவரத்தின்போது, காவல்துறையை சேர்ந்த ஒருவர் கொல்லப்பட்டார். இந்த கொலைக்கு முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா மற்றும் முக்கிய அதிகாரிகளே காரணம் என வங்கதேசத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் மாமூன் மியா என்பவர் வங்கதேச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

இதனை விசாரித்த நீதிபதிகள், சம்பந்தப்பட்ட ஏழு பேர் மீது கொலை வழக்கைப் பதிவு செய்யுமாறு உத்தரவிட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளது. விரைவில் தான் நாடு திரும்பவுள்ளதாக ஷேக் ஹசீனா கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் கூறிய நிலையில், தற்போது அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனால் ஷேக் ஹசீனா நாடு திரும்புவதில் சிக்கல் ஏற்படும் என்றும், ஒருவேளை அவர் வங்கதேசம் திரும்பினால் கைது செய்யவும் வாய்ப்புள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

Also Read: "கல்லூரி பாடத்திட்டத்தில் RSS தலைவர்களின் கருத்தை சேர்க்கவேண்டும்"- ம.பி பாஜக அரசின் உத்தரவால் அதிர்ச்சி!