Sports

பாரிஸ் ஒலிம்பிக் : கடைசி இரு ஆட்டங்களில் நடந்த ட்விஸ்ட்... மயிரிழையில் சீனாவை வீழ்த்திய அமெரிக்கா !

33-வது ஒலிம்பிக் தொடர் பிரான்ஸ் தலைநகர் பாரிஸ் நகரில் கடந்த 26-ம் தேதி கோலாகலமாக தொடங்கியது. இந்த ஒலிம்பிக் தொடரில் 206 நாடுகளை சேர்ந்த 10,500 வீரர்கள் கலந்துகொண்டனர். இந்த தொடர் நேற்று பிரமாண்டமாக நடைபெற்ற நிகழ்ச்சியுடன் முடிவுக்கு வந்தது.

இந்த ஒலிம்பிக் தொடரில் ஆரம்பத்தில் இருந்தே பதக்கப் பட்டியலில் முதலிடம் பிடிக்க கடும் போட்டி நிலவியது. ஆரம்பத்தில் ஆஸ்திரேலியா, ஜப்பான், தென் கொரியா மற்றும் போட்டியை நடத்திய பிரான்ஸ் ஆகிய நாடுகள் பதக்கப்பட்டியலில் ஆதிக்கம் செலுத்தியது.

ஆனால், தொடர்ந்து வந்த நாட்களில் சீனா முதலிடத்தை கைப்பற்றியது. அதனைத் தொடர்ந்து தடகள போட்டிகளுக்கான போட்டிகள் கடைசி சில நாட்களில் நடைபெற்ற நிலையில், அதில் அதிக பதக்கங்களை கைப்பற்றிய அமெரிக்கா சீனாவுக்கு கடும் போட்டியை அளித்தது.

ஒலிம்பிக் தொடரின் இறுதி நாளான நேற்று கூட சீனா அமெரிக்காவை விட இரண்டு தங்கப்பதக்கங்களை அதிகம் வென்றிருந்தது. இதனால் இந்த தொடரில் சீனா முதலிடம் பிடிக்கும் என்றே எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கடைசி இரு போட்டிகள் இந்த நிலையை மாற்றியது.

ஒலிம்பிக்கில் கடைசிக்கு முந்தைய போட்டியாக நடைபெற்ற சைக்கிளிங் போட்டியில் அமெரிக்கா தங்கப்பதக்கத்தை கைப்பற்றியது. அதனைத் தொடர்ந்து இறுதிப்போட்டியாக பெண்கள் கூடைப்பந்து போட்டி நடைபெற்றது. பரபரப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் பிரான்ஸ் அணியை 66-67 என்ற கணக்கில் வீழ்த்தி அமெரிக்க அணி தங்கப்பதக்கத்தை கைப்பற்றியது.

இதனால் 40 தங்கப்பதக்கத்துடன் சீனா, அமெரிக்கா ஆகிய நாடுகள் சமநிலையில் இருந்தாலும் கூட, அதிக வெள்ளிப்பதக்கத்தை வென்றதால் அமெரிக்கா பதக்கப்பட்டியலில் முதலிடத்துக்கு முன்னேறியது. அமெரிக்கா 40 தங்கம், 44 வெள்ளி, 42 வெண்கலம் என மொத்தம் 126 புத்தகங்களுடன் பதக்கப்பட்டியலில் முதலிடத்தையும், சீனா 40 தங்கம், 27 வெள்ளி, 24 வெண்கலம் என 91 பதக்கங்களுடன் இரண்டாம் இடத்தை பிடித்துள்ளது.

Also Read: நிறைவடைந்தது ஒலிம்பிக் விளையாட்டு போட்டிகள் : முதலிடத்தை பிடித்த அமெரிக்கா, இந்தியாவுக்கு எந்த இடம் ?