Sports

”பாகிஸ்தான் வீரரும் என் மகன்தான்” : நீரஜ் சோப்ராவின் தாயார் பெருமிதம்!

33-வது ஒலிம்பிக் தொடர் பிரான்ஸ் தலைநகர் பாரிஸ் நகரில் கோலாகலமாக தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் இதுவரை இந்தியா 4 வெண்கலப் பதக்கங்களை வென்றுள்ளது.

இந்த தொடரில் ஈட்டி எறிதல் போட்டியில் இந்திய வீரர் நீரஜ் சோப்ரா தங்கப் பதக்கம் வெல்வார் என்று நாடே எதிர்பார்த்து காத்திருந்தது. நேற்று இறுதிப்போட்டி நடைபெற்றது. இதில் இந்திய வீரர் நீரஜ் சோப்ரா 89.45 மீட்டர் தூரம் ஈட்டி எறிந்து வெள்ளிப் பதக்கம் வென்றார்.

இதையடுத்து தங்கத்தை தவற விட்டாலும் இந்த தொடரில் வெள்ளிப் பதக்கம் வென்று கொடுத்த முதல் வீரர் என்பதால் நீரஜ் சோப்ராவுக்கு பிரதமர் மோடி முதல் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட பலரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

அதேபோல் இப்போட்டியில் அண்டை நாடான பாகிஸ்தான் வீரர் அர்ஷத் நதீம் 92.97 மீட்டர் தூரம் ஈட்டி எரிந்து தங்கப் பதக்கம் வென்றார். இது ஒலிம்பிக் சாதனையாகும்.

இதையடுத்து நீரஜ் சோப்ரா வெள்ளிப் பதக்கம் வென்றது குறித்து அவரது தாய் சரோஜ் தேவி பேசும் போது, ”என் மகன் வெள்ளிப் பதக்கம் வென்றது மகிழ்ச்சி அளிக்கிறது. அதேபோல் தங்கம் வென்ற பாகிஸ்தான் வீரர் அர்ஷத்தும் என் மகனைப் போன்றவர்தான்” என பெருமையுடன் கூறியுள்ளார்.

விளையாட்டில் கூட வெறுப்பை விதைப்பவர்கள் மத்தியில் அன்பை போதித்துள்ள நீரஜ் சோப்ராவின் தாயாருக்கு பலரும் பாராட்டு தெரிவித்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read: பாரிஸ் ஒலிம்பிக் : ஹாக்கி போட்டியில் வெண்கலம் வென்றது இந்தியா... ஸ்பெயின் அணியை வீழ்த்தி அபாரம் !