Sports

"உலகையே ஆளப்போகிறவர் சொந்த நாட்டில் தோற்றுவிட்டார்" - ஒலிம்பிக்கில் சாதித்த வினேஷ் போகத் !

இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவராக இருந்தவர் பிரிஜ் பூஷன் சரண் சிங். இவர் பா.ஜ.கவின் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த நிலையில், பெண் மல்யுத்த வீராங்கனைகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த சர்ச்சையில் சிக்கினார். இது குறித்துப் பாதிக்கப்பட்ட பெண்கள் பிரிஜ் பூஷனுக்கு எதிராகப் புகார் கொடுத்தும் எவ்விதமான நடவடிக்கையும் எடுக்காததால் கடந்த ஆண்டு மே மாதம் டெல்லியில் மல்யுத்த வீராங்கனைகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போதும் ஒன்றிய பா.ஜ.க அரசு பெண் வீரர்களின் குரல்களுக்குக் காது கொடுக்காமல் பிரிஜ் பூஷனை காப்பாற்ற போலிஸாரை கொண்டு போராட்டத்தை ஒடுக்கப்பார்த்தது. ஆனால் மல்யுத்த வீரர்கள் உறுதியுடன் தங்களது போராட்டத்தைத் தொடர்ந்தனர்.அதனைத் தொடர்ந்து புதிய நாடாளுமன்றத்தை முற்றுகையிட முயன்றபோது அவர்களை போலிஸார் தரதரவென இழுத்துச் சென்று கைது செய்த சம்பவம் நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

நாட்டுக்காக பல்வேறு பதக்கங்களை வென்ற மல்யுத்த வீரர், வீராங்கனைகளை ஒன்றிய பாஜக அரசு இந்த அளவு மோசமான நடத்தியதற்கு பலரும் கண்டனம் தெரிவித்தனர். இதனால் வேறு வழி இல்லாமல் பிரிஜ் பூஷன் மீது POSCOவில் வழக்குப் பதிவு செய்தும், அவர் கைது செய்யப்படவில்லை. அதோடு நடந்துமுடிந்த நாடாளுமன்ற தேர்தலிலும் பிரிஜ் பூஷனின் மகனுக்கு சீட் கொடுத்தது பாஜக அரசு. இந்த நிலையில், பாஜக அரசால் மோசமாக நடத்தப்பட்ட மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் தற்போது ஒலிம்பிக் தொடரின் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளார்.

காலிறுதிக்கு முந்தைய போட்டியில் வினேஷ் போகத் சர்வதேச போட்டிகளில் உலகின் நம்பர் 1 வீராங்கனையும், 4 முறை உலக சாம்பியன், நடப்பு ஒலிம்பிக் சாம்பியனுமான ஜப்பானின் யூ சுசாகியை எதிர்கொண்டார். இதில் முதலில் பின்னடைவில் இருந்த அவர் கடைசி 20 நொடிகளில் அபாரமாக செயல்பட்டு இதுவரை எந்த போட்டியிலும் தோற்கடிக்கப்படாமல் இருந்த யூ சுசாகியை வீழ்த்தினார்.அதனைத் தொடர்ந்து நடைபெற்ற காலிறுதிப்போட்டியில் உலகின் 7-ம் நம்பர் வீராங்கனையான உக்ரைனின் ஒல்ஸானா லிவாச்சை வீழ்த்தி வினேஷ் போகத் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளார்.

அவரின் இந்த சாதனையை அனைவரும் கொண்டாடி வரும் சூழலில், உலகையே ஆளப்போகும் வினேஷ் போகத் சொந்த நாட்டில் தோற்றுவிட்டார் என்று ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்ற இந்திய மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா கருத்து தெரிவித்துள்ளார். இது குறித்து கருத்து தெரிவித்துள்ள அவர், "பாரிஸ் ஒலிம்பிக்கில் 4 முறை உலக சாம்பியன் பட்டம் வென்ற வீராங்கனையை வீழ்த்தியதோடு, காலிறுதியில் முன்னாள் உலக சாம்பியனையும் வினேஷ் போகத் வீழ்த்தியுள்ளார். ஆனால் இவரை சொந்த நாடே உதறித்தள்ளி, தெருக்களில் தரத்தரவென இழுத்துச்சென்றது. இவர்தான் இப்போது உலகையே ஆளப்போகிறார். ஆனால், சொந்த நாட்டின் கட்டமைப்பிடம் தோற்றுவிட்டார்"என்று கூறியுள்ளார்.

Also Read: ஒலிம்பிக் தொடரில் 5 போட்டிகளில் 4-ம் இடம்... மயிரிழையில் பதக்கத்தை தவறவிட்ட இந்திய வீரர்கள் யார் யார் ?