Sports
மைதானங்களே இல்லாத குஜராத்தில் ஒலிம்பிக் போட்டி ? - அனைத்து வசதிகள் இருந்தும் புறக்கணிக்கப்படும் சென்னை !
உலகளவில் நடக்கும் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாவான ஒலிம்பிக் போட்டிகளை இந்தியாவில் நடந்த கடந்த சில ஆண்டுகளாவே பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்தியாவில் இந்த மிகப்பெரிய விளையாட்டு திருவிழா நடைபெறவுள்ளது விளையாட்டு ஆர்வலர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், பாஜகவை சேர்ந்த ஒன்றிய அமைச்சர் அமித்ஷா குஜராத்தில் ஒலிம்பிக் போட்டிகளை நடத்த ஏற்பாடுகள் செய்யப்படுவதாக பகிரங்கமாகி கூறியுள்ளது விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவை பொறுத்தவரை தலைநகரமான டெல்லியே உலகளவிலான விளையாட்டு தொடர்களை நடத்தியுள்ளது. காமன்வெல்த் போட்டி 2010-ம் ஆண்டிலும், 1951 மற்றும் 1982-ம் ஆண்டுகளில் ஆசிய போட்டிகளும் டெல்லியில் நடைபெற்றுள்ளது. இதற்கு அடுத்ததாக 1987-ம் ஆண்டு கொல்கத்தா, 1996-ம் ஆண்டு சென்னை, 2016 கவுகாத்தி, ஷில்லாங் ஆகிய இடங்களிலும் தெற்காசிய விளையாட்டு போட்டிகளும் நடைபெற்றுள்ளது. இதில் 2010-ம் ஆண்டு டெல்லி காமன்வெல்த் போட்டியும், 1996-ம் ஆண்டு சென்னை தெற்காசிய விளையாட்டு போட்டிகளும் பெரும் வரவேற்பை பெற்றது. 2016 தெற்காசிய விளையாட்டு போட்டிகள் சிறப்பாக நடைபெற்றிருந்தாலும் போதிய கட்டமைப்பு ஏற்பாடுகள் செய்யப்படவில்லை என விமர்சனங்களும் எழுந்தன.
இதை எல்லாம் தாண்டி இந்தியாவிலேயே டெல்லி, சென்னை, கொல்கத்தா ஆகிய இடங்களில் மட்டுமே பெரிய அளவிலான தொடர்களில் நூற்றுக்கணக்கான வீரர்கள் ஒரே நேரத்தில் பயிற்சி பெற போதுமான உள்கட்டமைப்புகள் அமைக்கப்பட்டுள்ளது. பிற இடங்களில், அதிலும் குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் தற்போதுவரை போதுமான உள்கட்டமைப்புகள் அமைக்கப்படாத நிலையில், அங்கு ஒலிம்பிக் போன்ற மாபெரும் போட்டிகள் நடத்த இந்திய அரசு முன்வருவது பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.
குறிப்பாக ஒலிம்பிக் போன்ற விளையாட்டுகளில் அனைத்து விதமான போட்டிகளும் இடம்பெறும். தடகளம், நீச்சல் போன்ற விளையாட்டுகளில் ஆயிரக்கணக்கான வீரர், வீராங்கனைகள் கலந்துகொள்வார்கள். ஆனால் தற்போது வரை சர்வதேச தரத்திலான ஒரு தடகள மைதானம் கூட குஜராத்தில் அகமதாபாத்தில் இல்லை என்ற சூழல்தான் நிலவுகிறது. விளையாட்டு போட்டிகளுக்கு முக்கியமான தடகள மைதானம் கூட அகமதாபாத்தில் இல்லாத நிலையில், பிற விளையாட்டு மைதானங்களின் நிலையை பற்றி கேட்கவே வேண்டாம்.
தற்போது ஒலிம்பிக் போட்டி பிரான்ஸ் தலைநகர் பாரிசில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டிக்காக மட்டும் 8 பில்லியன் டாலர் (இந்திய மதிப்பில் 60 ஆயிரம் கோடி ) செலவிடப்பட்டுள்ளது. அதே நேரம் 2016 ஒலிம்பிக் போட்டிகளை நடத்திய பிரேசில் 20 பில்லியன் டாலர்கள் ( இந்திய மதிப்பில் 1.50 லட்சம் கோடி) செலவு செய்துள்ளது.
பாரிஸ் ஒலிம்பிக் தொடரை விட பிரேசில் ஒலிம்பிக் தொடருக்கு அதிக செலவாக உள்கட்டமைப்பு பணிகளுக்கு அதிகம் செலவிடப்பட்டதே காரணமாக கூறப்பட்டது. ஏனெனில் பாரிஸ் நகரில் உலகளவிலான போட்டிகளை நடத்தும் மைதானங்கள் ஏற்கனவே அமைக்கப்பட்டிருந்தது. அதனால் அந்த நகரில் ஒலிம்பிக் போட்டிகளை நடத்த குறைவான தொகையே செலவிடப்பட்டது. அதே நேரம் பிரேசிலில் சர்வதேச தரத்திலான விளையாட்டு போட்டிகளை நடத்த ஏதுவான மைதானங்கள் இல்லாத காரணத்தால் அதற்கு மட்டும் பல ஆயிரம் கோடி செலவு செய்யப்பட்டது.
இதே நிலைதான் இந்தியாவிலும். தலைநகர் டெல்லியில் சர்வதேச அளவிலான விளையாட்டு தொடர்கள் நடந்துள்ளதால் ஏற்கனவே மைதானங்கள் அமைக்கப்பட்டுள்ளது. அதே போல சென்னை கடந்த 20 வருடங்களாகவே விளையாட்டு கட்டமைப்புகளை தொடர்ந்து உருவாக்கி வருகிறது. இதனால் சர்வதேச அளவிலான மைதானங்கள் சென்னையில் நிறுவப்பட்டு இந்தியாவின் விளையாட்டு தலைநகர் என்றே சொல்லும் அளவு தற்போது உயர்ந்து இருக்கிறது.
தெற்காசியாவிலேயே மிகப்பெரிய பல்நோக்கு மைதானங்களில் ஒன்றான நேரு விளையாட்டு மைதானம், சிறப்பான உள்விளையாட்டு அரங்கையும் கொண்டுள்ளது. ஹாக்கிக்கு எழும்பூர் ராதாகிருஷ்ணன் மைதானம், கிரிக்கெட் போட்டிகளுக்கு சேப்பாக்கம் மைதானம், விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் நீச்சல் மைதானம், டென்னிஸ்க்கு நுங்கம்பாக்கம் மைதானம் என சர்வதேச போட்டிகளை நடத்திய அனுபவத்துடன் சென்னை திகழ்ந்து வருகிறது.
இதன் காரணமாக சென்னை, டெல்லி போன்ற இடங்களில் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்றால் புதிய மைதானங்கள் அமைக்க எந்த செலவையும் மேற்கொள்ளவேண்டிய நிலை ஏற்படாது. இதன் மூலம் பல ஆயிரம் கோடியை மிச்சம் செய்து, அதன் மூலம் உலகையே திரும்பிப்பார்க்கும் வகையில் ஒலிம்பிக் போட்டிகளை சிறப்பாக நடத்தலாம். அதே அஹமதாபாத்தில் ஒலிம்பிக் போட்டிகளை நடத்தினால் மைதானங்கள் அமைக்கவே ஒலிம்பிக் நிதியில் பல கோடிகளை செலவு செய்யும் சூழல் உருவாகும். தற்போதைய நிலையில், குஜராத் அரசு சுமார் 6 ஆயிரம் கோடியை முதற்கட்டமாக மைதானங்களை அமைக்க ஒதுக்கியுள்ளது. ஆனால் வரும் காலங்களில் ஒன்றிய அரசு சார்பில் நிதி ஒதுக்கினால் மட்டுமே புதிய மைதானங்கள் அமைப்பது சாத்தியமாகும். இதற்கு ஒட்டுமொத்த நாட்டு மக்களின் வரிப்பணமும் செலவாகும். இதனால் ஒலிம்பிக் போட்டிகளை டெல்லி, சென்னை போன்ற நகரங்களில் நடத்துவதே சிறந்ததாகும்.
ஒலிம்பிக்கை நடத்த விரும்பும் ஒரு நாடு ஏற்கெனவே உள்ள உள்கட்டமைப்பு வசதிகளை அதிகளவில் பயன்படுத்த வேண்டும் என்பது ஒலிம்பிக் கமிட்டியின் முக்கியமான விதியாகும். அந்த வசதிகள் இருக்கும் நகரமே ஒலிம்பிக் போட்டியை நடத்த தேர்வு செய்யப்படும். இதனால் இந்தியா சார்பில் அகமதாபாத் ஒலிம்பிக் போட்டிகளை நடத்த போட்டியிட்டால் இந்த விதியை காரணமாக காட்டி போட்டியில் இந்தியா தோல்வியடைய வேண்டிய சூழலும் உருவாகும். இந்தியாவை போலவே 2036 போட்டிகளை நடத்த போலந்து, இந்தோனேசியா மற்றும் துருக்கி ஆகிய நாடுகள் விருப்பம் தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
செலவுகளை தாண்டி ஒரு ஒலிம்பிக் தொடர் வரவேற்பை பெற அந்த நகரின் மக்கள் விளையாட்டின் மீது ஆர்வலர்களாக இருக்கவேண்டும். இந்தியா கிரிக்கெட்டுக்கு பெயர்பெற்றது. கடந்த ஆண்டு நடந்த கிரிக்கெட் உலகக்கோப்பையில் அகமதாபாத்தில் ஏராளமான போட்டிகள் நடைபெற்றது. ஆனால், அதில் இந்தியா மோதிய போட்டியை தாண்டி பிற அணிகள் மோதிய போட்டியின்போது மைதானம் முழுக்க காலியாகவே இருந்தது. பல போட்டிகளில் 10 ஆயிரம் ரசிகர்கள் கூட வரவில்லை என்பதில் இருந்தே அகமதாபாத் ரசிகர்களின் மனநிலையை புரிந்து கொள்ளலாம். கிரிக்கெட் போட்டிகளுக்கே இந்த நிலை என்றால் பிற போட்டிகளை அந்த நகர மக்கள் எப்படி அணுகுவார்கள் என்ற கேள்வியும் எழுகிறது. ஒலிம்பிக் போட்டிகளுக்கு வெளிநாட்டு ரசிகர்கள் வருவார்கள் என்றாலும், உள்நாட்டு விளையாட்டு ஆர்வலர்கள் இல்லாமல் மைதானம் காலியாக இருந்தால் உலகளவில் அது இந்தியாவுக்கு பெருத்த அவமானத்தையே ஏற்படுத்தும்.
அதே சென்னையில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் உலகமே வியக்கும் வகையில் செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் நடைபெற்றது. அந்த தொடர் வெற்றிபெற முக்கிய காரணமாக அமைந்தது அந்த தொடருக்கு சென்னை ரசிகர்கள் அளித்த பெரும் வரவேற்பு. அந்த தொடர் முழுக்க மைதான அரங்கில் ஏராளமான லோக்கல் ரசிகர்கள் வருகை தந்தார்கள். இதுதான் அந்த தொடர் வரலாற்றிலேயே இல்லாத அளவு சாதனை படைக்க முக்கிய காரணமாக அமைந்தது. அதோடு சென்னை எப்போதும் அறிவார்ந்த ரசிகர்கள் கொண்டது என்ற பெயரை பெற்றுள்ளது. பாகிஸ்தானுக்கே ஆதரவு கொடுத்தவர்கள் உலகின் மிக சிறந்த வீரர்களை கொண்டாடி தீர்ப்பார்கள் என்பதிலும் யாருக்கும் எந்த சந்தேகமும் இருக்காது.
ஒருவேளை அகமதாபாத்தில் விளையாட்டு மைதானங்கள் அமைக்கப்பட்டாலும் ஒலிம்பிக் தொடருக்கு பின் அவை முறையாக பயன்படுத்தப்படுமா? அங்குள்ள மக்கள் மத்தியில் கிரிக்கெட்டை தாண்டி பிற விளையாட்டுகள் வரவேற்பை பெறுமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. ஏனெனில் குஜராத் மாநிலம் விளையாட்டுக்கு பெயர் பெற்றதாக ஒருபோதும் இருந்ததில்லை. அந்த மாநில அரசும் இதுவரை விளையாட்டுக்கு எந்தவித முக்கியத்துவத்தையும் அளிக்கவில்லை. பிரேசில் 20 பில்லியன் டாலர்கள் செலவில் ஒலிம்பிக் போட்டியை நடத்தி, புதிய மைதானங்கள் அமைத்தும், அந்த புதிய மைதானங்கள் பின்னர் பயன்படுத்தப்படாமல் போனது. இதனால் அந்நாட்டுக்கு ஒலிம்பிக் தொடர் பொருளாதார ரீதியிலும், விளையாட்டு வளர்ச்சி ரீதியிலும் பின்னடைவாகவே அமைந்தது. அதே நிலைதான் அகமதாபாத்துக்கும் ஏற்படும் சூழலும் அமையும்.
இவ்வாறு எந்த வகையிலும் போட்டியை நடத்த உகந்த இடமாக இல்லாத குஜராத்தின் அகமதாபாத்தில் ஒலிம்பிக் போட்டியை நடத்த ஒன்றிய அரசு முயற்சித்து வருவது வெறும் அரசியலுக்காக என்றே பார்க்கவேண்டியுள்ளது. கிரிக்கெட்டில் அமித் ஷாவின் மகன் ஜெய்ஷா, அவரின் கீழ் உலகக்கோப்பையில் முக்கிய போட்டிகள் அகமதாபாதத்தில் நடைபெற்றது போன்றவை விமர்சனங்களை ஏற்படுத்தியது. அந்த வகையில் வெறும் அரசியலுக்காக அனைத்திலும் குஜராத் முன்னிறுத்தப்படுவது இந்திய விளையாட்டு துறைக்கு பெரும் பின்னடைவாகவே அமையுமே தவிர அதனை வலுவாக்காது என்பதே உண்மை.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!