Sports

பாரிஸ் ஒலிம்பிக் : இரண்டாவது பதக்கத்தை வென்றது இந்தியா : இரு பதக்கங்களை வென்று சாதனை படைத்த மனு பாக்கர் !

33-வது ஒலிம்பிக் தொடர் பிரான்ஸ் தலைநகர் பாரிஸ் நகரில் கோலாகலமாக தொடங்கி நடைபெற்று வருகிறது. ஆகஸ்ட் 11ஆம் தேதி வரை நடைபெறவுள்ள இந்த ஒலிம்பிக் தொடரில் 206 நாடுகளை சேர்ந்த 10,500 வீரர்கள் கலந்துகொள்கின்றனர்.

இந்த தொடரில் இந்தியாவை சேர்ந்த 117 வீரர், வீராங்கனைகளும் பங்கேற்கவுள்ளனர். இந்த தொடரில் இந்தியாவின் முதல் பதக்கத்தை 22 வயதான இந்திய வீராங்கனை மனு பாக்கர் வென்று அசத்தினார். மகளிர் துப்பாக்கிச்சுடுதல் 10மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில் அவர் வெண்கல பதக்கம் வென்றார்.

இந்த நிலையில், இன்று இந்தியாவுக்கு இரண்டாவது பதக்கம் கிடைத்துள்ளது. துப்பாக்கி சுடுதல் போட்டியின் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் கலப்பு இரட்டையர் பிரிவில், இந்தியாவின் மனு பாக்கர் - சரப்ஜோத் சிங் இணை வெண்கல பதக்கம் வென்றுள்ளது.

வெண்கல பதக்கத்துக்கான போட்டியில் இந்தியாவின் மனு பாக்கர் - சரப்ஜோத் சிங் இணை , தென் கொரியாவின் லீ வான்ஹோ - ஒ யே-ஜின்னை இணையை சந்தித்தது. இதில் இந்திய இணை 6-10 என்ற கணக்கில் தென் கொரியாவை வீழ்த்தி வெண்கலப் பதக்கம் வென்றது.

மகளிர் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில் மனு பாக்கர் வெண்கலம் வென்ற நிலையில், கலப்பு இரட்டையர் பிரிவிலும் அவர் வெண்கலம் வென்றுள்ளார். இதன் மூலம் ஒரே ஒலிம்பிக் தொடரில் இரண்டு பதக்கங்கள் வென்ற முதல் இந்தியர் என்ற சாதனையை மனு பாக்கர் படைத்துள்ளார்

Also Read: தவறே நடக்கவில்லை என சாதித்தவர்கள், மோசடியை ஒப்புக்கொண்டார்கள்! : நீட் மோசடி அம்பலமானதை விளக்கிய முரசொலி!